பக்கம்:கேரக்டர்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



73

சாற்றைத் துப்பிவிட்டு அவர்கள் பேச்சில் கலந்து கொள்வாள்.

போலீஸ்காரர்கள், கார்ப்பரேஷன் சுகாதார இலாகா சிப்பந்திகள் யாருமே அவளிடம் கொஞ்சம் மரியாதையாகத் தான் பேசுவார்கள். டாணாக்காரர்கள் யாராவது வந்தால், "இன்னா பல்லைக் காட்டறே? ஓசி நாஷ்டாவா?" என்பாள்.

கார்ப்பரேஷன் ஆள் வந்தால், "இங்கே ஓசிலே துண்ணுட்டுப் போயிடு. அங்கே போய் ஆப்பத்திலே ஈ மொய்க்குதுன்னு கேசு எழுதிடு. ஏன்யா! ஈ மொய்க்கிற ஆப்பத்தை நீ மட்டும் துண்ணலாமாய்யா?" என்று கேட்பாள்.

அம்மாக்கண்ணு தன் கடைக்கு வரும் வாடிக்கைக்காரர்களையெல்லாம் சொந்தக் குடும்பத்தாரைப் போலவே நடத்துவாள்.

வெளிப்பார்வைக்கு அவள் சற்றுக் கடுமையாத் தோன்றினாலும் இளகிய மனசு படைத்தவள். கஷ்டப்படுகிறவர்களுக்குத் தன்னை மீறியும் உபகாரம் செய்யும் குணம் அவளிடம் உண்டு.

"பாக்கி கொடுக்க முடியல்லேன்னா அதுக்காக ஏண்டா தலை தப்பிச்சுக்கினு திரியறே? பணம் கெடைக்கறப்போ கொடுக்கறது. நான் மாட்டேன்னா சொல்றேன்? இதுக்காவ 'நாஷ்டா' பண்ண வரதையே நிறுத்திடறதா? ஒழுங்கா வந்து சாப்பிட்டுக்கினு இரு" என்று சிலரிடம் அன்பொழுகப் பேசி அனுப்புவாள். அவளுக்கும் அடிக்கடி பணமுடை ஏற்படுவதுண்டு. அம்மாதிரி சமயங்களில் டீக்கடை மலையாளத்தாரிடமோ அல்லது கட்டைத்தொட்டி நாடாரிடமோ முப்பது நாற்பது கைமாற்றாக வாங்கிக் கொள்வாள். சொல்கிற 'கெடு' வில் அவர்களுக்குப் பணத்தைத் திருப்பியும் கொடுத்து விடுவாள். அப்படி முடியாத சமயங்களில் அவள் தன் காதிலுள்ள கம்மலைக் கழற்றிக்கொண்டுபோய் மார்வாடிக்கடையில் ‘குதுவு' வைத்தாவது பணத்தைத் திருப்பிக் கொடுக்கத் தயங்கமாட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/73&oldid=1479472" இலிருந்து மீள்விக்கப்பட்டது