பக்கம்:கேரக்டர்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

"இன்னா நாடாரே, கொஞ்சம் கடையைப் பார்த்துக்க. கஞ்சித்தொட்டி ஆசுபத்திரி வரைக்கும் போயிட்டு வந்துட றேன்" என்பாள் அம்மாக்கண்ணு.

"ஆசுபத்திரியிலே இன்னாம்மா வேலை உனக்கு" என்பார் நாடார்.

"பிச்சைக்கார முருவன் இல்லே, முருவன் அதாம்பா. இங்கே நெதைக்கும் வந்து ஆப்பம் சாப்பிடுவானே, அவன்."

"ஆமாம், அவனுக்கு இன்னா?" என்பார் நாடார்.

"அவன் மேலே கார் மோதிடுச்சாம் பாவம்? ஆசுபத்திரியிலே படுத்திருக்கானாம். அவனைப் போய்ப் பாத்துட்டு ரெண்டு ஆப்பத்தையும் குடுத்துட்டு வந்துடறேன்" என்பாள் அம்மாக் கண்ணு.

"சரி, கொஞ்சம் பொயலை இருந்தா குடுத்துட்டுப் போ" என்பார் நாடார்.

'உக்கும். ஈர வெறவெல்லாம் வித்து துட்டை முடி போட்டு வச்சுக்கோ" என்று சொல்லிக்கொண்டே தன் இடுப்பிலுள்ள சுருக்குப் பையைத் திறந்து புகையிலையை எடுத்துக் கொடுத்துவிட்டுப் போவாள்.

அம்மாக்கண்ணுவுக்குக் கொஞ்சம் சினிமாப் பயித்தியமும் உண்டு. மலையாளத்தார் கடை மீது வாரா வாரம் சினிமா விளம்பர போர்டுகள் கொண்டு வந்து வைப்பதைப் பார்த்துக் கொண்டே இருப்பாள். அதற்காக மலையாளத்தாருக்கு 'போர்டு பாஸ்' வரும் என்பதும் அவளுக்குத் தெரியும்.

"இன்னா மலையாளம்! சிவாஜி படம் வந்துருக்குதாமே? சினிமாவுக்கு ஒரு பாஸ் குடேன். பாத்துட்டு வரேன்" என்று மலையாளத்தாரிடம் பாஸ் கேட்டு வாங்கிக்கொண்டு அவ்வப்போது சினிமாவுக்குப் போய் வந்துவிடுவாள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/74&oldid=1479473" இலிருந்து மீள்விக்கப்பட்டது