பக்கம்:கேரக்டர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'ஜம்பம்' சாரதாம்பாள்

"சங்கரா!"—சாரதாம்பாளின் கம்பீரமான குரல் கேட்டுச் சமையல் கட்டிலிருந்து சங்கரன் ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸுடன் ஓடிவந்தான்.

"இந்த டிரைவர் ஸ்டுடிபேகரை எடுத்துண்டு எங்கடா தொலைஞ்சான்?...'ரோமியோ'வை எங்கே காணோம்? ரெண்டு நாளா அதுக்கு உடம்பே சரியாயில்லையே?... மணி எட்டாகப் போகிறதே? சாமளா இன்னும் மாடியிலே தூங்கிண்டுதான் இருக்காளா? டான்ஸ் வாத்தியார் வந்து எத்தனை நாழியா காத்திண்டிருப்பார்? அவளுக்கு 'பெட் காப்பி' கொடுத்து எழுந்திருக்கச் சொல்லுடா. டெலிபோன் மணி அடிக்கிறது பாரு; அப்படியே யாருன்னு எடுத்துக் கேட்டுட்டுப் போ!"

"வெடர்னரி டாக்டர் வீட்டிலேருந்து டிரைவர்தான் பேசறாம்மா! 'ரோமியோ'வை டாக்டர் கிட்டே காட்டினானாம் அதுக்கு 'த்ரோட்லே ஏதோ டிரபிளாம். நாலு நாளைக்கு அது 'ரெஸ்ட்' எடுத்துக்கணுமாம். அதிகமாகக் குரைக்கக்கூடாதாம்!" என்றான் சங்கரன்.

"உடம்பு சரியில்லாம இருக்கிறபோது பாவம், அதை ஏண்டா டாக்டர் வீட்டுக்கு அழைச்சுண்டு போனான்? போன் பண்ணினா டாக்டர் இங்கே வந்துட்டுப் போறார். சரி, அவனைச் சீக்கிரம் வரச்சொல்லு. 'ஷாப்பிங்' போகணும்!..."

சாரதாம்பாள் மூச்சு விடாமல் பேசிவிட்டு, சங்கரனிடமிருந்து சாத்துக்குடி ஜூஸை வாங்கி நாசூக்காக அருந்தினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/75&oldid=1479474" இலிருந்து மீள்விக்கப்பட்டது