பக்கம்:கேரக்டர்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

பிறகு இரண்டு மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். அப்புறம் சாவகாசமாக ஒரு சோபாவில் போய் உட்கார்ந்துகொண்டு, தன்னுடைய இடது கை வைர வளையல்களை ஒரு தடவை பட்டுப் புடைவையின் தலைப்பால் துடைத்துவிட்டுக்கொண்டே, விரல்களிலுள்ள மோதிரங்களைத் திருப்பித் திருப்பி அழகு பார்த்துக் கொண்டாள்.

வைரத்தாலும் தங்கத்தாலும் இழைக்கப்பட்ட இரட்டை நாடி சரீரம். காஞ்சீபுரம் பட்டுப் புடைவை. பளபளக்கும் மேனி. பிரபல அட்வகேட்டின் சம்சாரமல்லவா? பேச்செல்லாம் கொஞ்சம் 'தோரணை'யாகவேதான் இருக்கும்.

தான் அந்த வீட்டில் கால் எடுத்து வைத்த பிறகுதான் தன் கணவருக்கு அதிருஷ்டம் ஏற்பட்டதென்பது அவள் நினைப்பு. அந்தப் பெருமை அவள் பேச்சில் அடிக்கடி பல்லவி போல் வந்துகொண்டேயிருக்கும். வெளியிலே போனால் தன் 'ஜம்பம்'தான். யாரைப் பார்த்தாலும் தன் குழந்தைகளின் பிரதாபந்தான். சங்கீதக் கச்சேரிக்குப் போனால் அமெரிக்காவில் இருக்கும் தன் சின்னப்பிள்ளையைப் பற்றிப் பக்கத்திலிருக்கும் அம்மாளிடம் 'போர்' அடிப்பாள். தன் பெண்ணை மணந்துகொள்ள ஐ. ஏ. எஸ். பையன்கள் 'க்யூ'வில் நிற்பதாகச் சொல்லுவாள்.

"வரச் சொன்னீங்களாம்மா?" என்று கேட்டுக்கொண்டே வாசலில் வந்து நின்றான் ஆசாரி.

"ஆமாம்; இந்தக் காசுமாலையை அழிச்சு, கல் வெச்சு ஓட்டியாணமா செஞ்சுக் கொடுத்துடு, சாமளா டான்ஸு அரங்கேற்றத்துக்கு உதவும். அதுக்குத்தான் கூப்பிட்டேன். அந்த ஜட்ஜ் வீட்டுப் பெண்ணுக்கு செஞ்சிருக்கே பாரு ஒரு ஒட்டியாணம், அதேமாதிரி மாடல்லே செய்யணும். தெரிஞ்சுதா...?"

இதற்குள் அல்சேஷனுடன் காரில் வந்து சேர்ந்தான் டிரைவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/76&oldid=1479475" இலிருந்து மீள்விக்கப்பட்டது