பக்கம்:கேரக்டர்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



82

கிறதா என்று எதிர்பார்ப்பார். அச்சில் தம்முடைய பெயரைப் பார்ப்பதில் அவருக்கு அத்தனை ஆசை! அவருடைய கலியாணத்தின்போது முகூர்த்தப் பத்திரிகையில் அச்சடிக்கப்பட்டிருந்த தம்முடைய பெயரைப் பலமுறை பார்த்துப் பார்த்து மகிழ்ந்தவர் ஆயிற்றே அவர்?

ஒரு சங்கத்தின் ஆண்டு விழாவுக்கு மந்திரி ஒருவர் விஜயம் செய்தபோது, பங்காருசாமி ஆள்உயர மலர் மாலையை மந்திரியின் கழுத்தில் சூட்டினார். மந்திரியுடன் கை குலுக்கினார். ஆனால் குலுக்கிய கையை ஐந்து நிமிஷம் வரை விடாமல் பிடித்தபடியே போட்டோகிராபருக்குப் 'போஸ்' கொடுத்துக்கொண்டிருந்தார்! அந்த நேரத்தில் மந்திரி பாடு ரொம்பவும் அவஸ்தையாகப் போய்விட்டது.

ஊரில் யார் எந்தக் காரியம் செய்தாலும் பங்காருசாமிக்கு தூக்கம் வராது. தாமும் அதே காரியத்தைச் செய்து முடித்து விட்டுத்தான் மறு காரியம் பார்ப்பார். அதற்காக எவ்வளவு பணம் செலவானாலும் அதைப்பற்றி அவருக்குக் கவலை கிடையாது. அவருடைய பெயரும் போட்டோவும் பொது மக்கள் கண்களில் அடிக்கடி பட்டுக்கொண்டேயிருக்க வேண்டும். அதுதான் அவருடைய ஆசை.

கலியாண ஊர்வலம், சுவாமி புறப்பாடு என்றால் பங்காருசாமிதான் ஊர்வலத்துக்கு முன்னால் வருவார். இரு பக்கங்களிலும் காஸ் லைட்டுகள் ஒளி வீச, அந்த ஒளியில் அவருடைய வைர மோதிரங்கள் பளபளக்க நடந்து வருவார் அவர்.

வடக்கே யாரோ ஒரு பைராகிச் சாமியார் சகல வியாதிகளையும் குணப்படுத்துவதாகக் கேள்விப்பட்ட பங்காருசாமி, அந்தச் சாமியாரைத் தம்முடைய பங்களாவிலேயே அழைத்து வந்து வைத்துக்கொண்டார். "பங்காருசாமி பங்களாவில் பைராகிச் சாமியார் தங்கியிருக்கிறாராம்” என்று நாலுபேர் அவருடைய பெயரைச் சொல்லுவார்கள் அல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/82&oldid=1479753" இலிருந்து மீள்விக்கப்பட்டது