பக்கம்:கேரக்டர்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

உபயோகப்படாமலா போய்விடும்? காயலான் கடையிலும், மூர் மார்க்கெட்டிலும் அவன் வாங்கி வாங்கிச் சேகரித்து வைத்துள்ள பொருள்களைக்கொண்டே ஒரு பொருட்காட்சி நடத்திவிடலாம். அந்தச் சைக்கிள்கூட, பல பாகங்களைத் தனித் தனியாக வாங்கி, ரிப்பேர் ஷாப்பில் கொடுத்து உருவாக்கப்பட்டதுதான்.

காலையில் எழுந்ததும் சின்னசாமி டி.யு.சி.எஸ். வாசலில் போய் உட்கார்ந்துகொண்டு, அங்கு வரும் தினப்பத்திரிகையை இலவசமாகப் படித்துவிட்டு, அப்படியே கறிகாய் மார்க் கெட்டுக்குப் போய் ஒவ்வொரு கடையாக, காய்களின் விலையை விசாரித்து வாங்கி வருவான். அன்று மார்க்கெட்டில் எந்தெந்தக் காய்கள் மலிவு என்பதைச் சுலபமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் சின்னசாமி வாங்கும் கறிகாய்களிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

சின்னசாமி துணிகளைச் சலவைக்குப் போடமாட்டான். தானே துவைத்துத் தானே இஸ்திரி போட்டுக் கொள்வான். அந்த இஸ்திரிப் பெட்டிகூட அவனுடைய சொந்த 'மேக்' தான்!

மளிகைக் கடையிலிருந்து சாமான்கள் வாங்கி வந்தால் சாமான்கள் கட்டப்பட்டு வரும் காகிதங்களைக் கிழியாமல் மடித்து வைப்பதோடு சணல் கயிற்றையும் பத்திரமாகச் சுற்றி வைப்பான்.

தனக்கு வரும் தபால் கவர்களைக்கூட அவன் வீணாக்குவதில்லை. உறைகளைப் பிரித்து அடுக்கி வைத்துக்கொண்டு அவற்றின் பின்பக்கத்தை குறிப்பு எழுத உபயோகப்படுத்திக் கொள்வான்.

ஞாயிற்றுக்கிழமை வந்தால் சின்னசாமியை ஏலக்கம்பெனி ஏதாவது ஒன்றில்தான் பார்க்கமுடியும். நூறு ரூபாய் பெறுமானமுள்ள பொருளை மிகத் துணிந்து ஐந்து ரூபாய்க்குக் கேட்பாள். சில சமயம் அவன் கேட்கும் விலைக்கே அவை சல்லிசாகக் கிடைத்து விடுவதும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேரக்டர்.pdf/86&oldid=1479757" இலிருந்து மீள்விக்கப்பட்டது