பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

103

என்றுங் கூறப்படுகிறான்.* விச்சியூர் மலைமேல் விச்சிக் கோவுக்கு ஐந்தெயில் என்னும் பெயருள்ள கோட்டையிருந்தது.** இளஞ்சேரல் இரும்பொறை காலத்தில் அந்த விச்சிக்கோவின் மகனான இன்னொரு விச்சிக்கோ விச்சி நாட்டை யரசாண்டான். இளஞ்சேரல் இரும்பொறை தன்னுடைய ஆட்சிக்கு அடங்காமலிருந்த விச்சிக்கோவின் மேல் படையெடுத்துச் சென்று போர் செய்தான். விச்சிக் கோவுக்குச் சோழனும் பாண்டியனும் தங்கள் சேனைகளை உதவினார்கள். ஆனாலும் விச்சிக்கோ போரில் தோற்றான், அவனுடைய ஐந்தெயில் கோட்டையும் இளஞ்சேரலிரும் பொறைக் குரியதாயிற்று.***

சோழனுடன் போர்

        சோழ நாட்டரசன் பெரும்பூண் சென்னி என்பவன், தன்னுடைய சேனாதிபதியாகிய பழையன் என்பவன் தலைமையில் பெருஞ்சேனையை யனுப்பி வடகொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டின் தலைநகரமான கட்டூரின்மேல் போர் செய்தான். இளஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சியின் கீழிருந்த கட்டூரைச் சோழன் சேனாபதி பழையன் எதிர்த்தான். இளஞ்சேரல் இரும்பொறைக்குக் கீழடங்கியிருந்த சிற்றரசர்களான நன்னன் (நன்னன் உதியன்), ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை முதலானவர் பழையனை எதிரிட்டுப் போர் செய்தார்கள். பழையன் இவர்களை யெல்லாம் எதிர்த்துத் தனி நின்று கடும்போர் செய்தான், ஆனால், பலருடைய எதிர்ப்புக்குத் தாங்காமல் போர்க்களத்தில் இறந்து போனான்.

* (குறும்-328:5) 
** பாரி இறந்த பிறகு பாரிமகளிரைக் கபிலர் விச்சிக் கோவிடம் அழைத்து வந்து அவர்களை மணஞ் செய்து கொள்ளும்படி வேண்டினார். அதற்கு அவன் இணங்க வில்லை (புறம்-200)
*** "இருபெரு வேந்தரும் வீச்சியும்வீழ, வருமிகளைக் கல்லகத்து ஐந்தெயில் எறிந்து" (9ஆம் பத்து, பதிகம்).