பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

சேரலிரும்பொறையும் கணைக்காலிரும் பொறையும் வெவ்வேறு காலத்திலிருந்தவர்கள். இளஞ்சேரலிரும் பொறைக்குப் பின் ஒரு தலை முறைக்குப் பிறகு இருந்தவன் கணைக்காலிரும் பொறை. கழுமலத்தில் இரண்டு போர்கள் நடந்திருக்கின்றன. முதற்போர், சோழன் பெரும்பூண் சென்னிக்கும் இளஞ்சேரல் இரும்பொறையின் கீழடங்கின கணையனுக்கும் நடந்தது. அதன்பிறகு இரண்டாவது போர் சோழன் செங்கணானுக்கும் கணைக்காலிரும் பொறைக்கும் நடந்தது.

சோழன் பெரும்பூண் சென்னி கொங்கு நாட்டின் மேல் படையெடுத்து வந்து போர் செய்து கழுமலத்தைக் கைப்பற்றியதையறிந்த இளஞ்சேரல் இரும்பொறை சினங்கொண்டு, அந்தச் சென்னியைப் பிடித்து வந்து தன் முன்னே நிறுத்தும் படித் தன்னுடைய சேனைத் தலைவர்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் போய்ப் பெரும்பூண் சென்னியோடு போர்செய்தார்கள். அந்தப்போர் பெரும்பூண் சென்னி கைப்பற்றியிருந்த கழுமலம் என்னும் ஊரில் நடந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அந்தப் போரிலே சோழனுடைய படை வீரர்கள் தோற்று தங்களுடைய (வேல்களை) ஈட்டிகளைப்போர்க் களத்திலே விட்டுவிட்டு ஓடினார்கள். அவர்கள் போர்க்களத் தில் போட்டுவிட்டுச் சென்ற வேல்களின் எண்ணிக்கை, செல்வக் கடுங்கோ வாழியாதன் (இளஞ்சேரல் இரும்பொறை யின் பாட்டன்) தன்னை ஏழாம்பத்தில் பாடின கபிலருக்குப் பரிசாகக் கொடுத்த ஊர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்தது.[1]


  1. “நன்மரம் துவன்றிய நாடு பல தரீஇப், பொன்னவிர்
    புனைசெயல் இலங்கும் பெரும்பூண், ஒன்னாப் பூட்கைச்
    சென்னியர் பெருமான், இட்டவெள்வேல் முத்தைத்
    தம்மென, ........................உவலை கூராக்
    கவலையில் நெஞ்சின், நனவிற் பாடிய நல்லிசைக்,
    கபிலன் பெற்ற ஊரினும் பலவே”. (9-ஆம் பத்து 5)

கொ-7