பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

இந்நூலாசிரியரும் இவ்வாறே தவறாகக் கருதியிருந்தார்.[1]

இது தவறு என்பதை இப்போதறிந்து கொண்டேன்'

டாக்டர். எஸ். கிருஷ்ணசாமி அய்யங்கார் இளஞ்சேர லிரும்பொறையைப் பற்றித் தெளிவாகக் கூறவில்லை. “பெருஞ்சேரல் இரும்பொறையுடன் மாறு கொண்ட இப்பெயர் இவனை அவன் மகனெனக் குறிக்கும் நோக்குடன் ஏற்பட்ட தொடர் என்பது தோன்றும். அதனுடன் உண்மையில் பதிகமே (9-ஆம் பத்துப் பதிகம்) அவன் குட்டுவன் இரும்பொறைக்கும் மையூர்கிழான் மகள் அந்துவஞ் செள்ளைக்கும் புதல்வன் என்று கூறுகிறது.” என்று எழுதுகிறார்.[2] இளஞ்சேரல் இரும்பொறை, பெருஞ்சேரல் இரும்பொறையின் மகனா, குட்டுவன் இரும்பொறையின் மகனா என்று, அவர் திட்டமாகக் கூறாமல் விட்டு விட்டார்.

செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு புதல்வர் இருந்தனர் என்பதை இவர் அறியாதபடியால் இந்தத் தவறு நேர்ந்தது. செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள் என்று அவனைப் பாடிய ஏழாம்பத்து கூறுகிறது.

வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
இளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கடன் இறுத்த வெல்போர் அண்ண ல்[3]


  1. * பக்கம் 24. சேரன் செங்குட்டுவன். சென்னைப் பல் கலைக் கழகப் பதிப்பு, மயிலை சீனி வேங்கடசாமி., Annals of Oriental Research, University of Madras. (Val xxi part 1 1966).
  2. ** பக்கம் 121, 122. சேரன் வஞ்சி. திவான்பகதூர் டாக்டர் எஸ். கிருஷ்ணசாமி ஐயங்கார். (1946)
  3. ***(7 ஆம்பத்து. 10 : 20-22)