பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


இந்தத் துணைப் புதல்வரின் (இரண்டு மகன்களில்) மூத்தவன் பெருஞ்சேரல் இரும்பொறை (8-ஆம் பத்துப் பதிகம்), இளைய மகன் குட்டுவன் இரும்பொறை; (9-ஆம் பத்து பதிகம்). குட்டுவன் இரும்பொறையின் மகன் இளஞ் சேரல் இரும்பொறை. இதனைக் கீழ்க்கண்ட பட்டியலில் விளக்கமாகக் காண்க.

கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி இளஞ்சேரலிரும்பொறையைப்பற்றி விசித்திரமாக ஓர் ஊகத்தைக் கற்பிக்கிறார். செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு அந்துவஞ் செள்ளை என்று ஒரு தங்கை இருந்தாளென்றும் அவளைக் குட்டுவன் இரும்பொறை மணஞ் செய்து கொண்டானென்றும் அவர்களுக்குப் பிறந்த மகன் இளஞ்சேரல் இரும்பொறை என்றும் கற்பனையாகக் கூறுகிறார்.

அந்துவன் பொறையன், அந்துவஞ்செள்ளை என்னும் பெயர்களில் உள்ள அந்துவன் என்னும் பெயர்களில் உள்ள அந்துவன் என்னும் பெயர் ஒற்றுமை ஒன்றை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இவர் இவ்வாறு ஊகிக்கிறார். அந்துவஞ் செள்ளை மையூர்கிழானுடைய மகள், அந்துவன் பொறையன் வேறு, மையூர்கிழான் வேறு. இருவரையும் ஒருவர் என்று சாஸ்திரி இணைப்பது தவறு, இவருடைய ஊகமும் கற்பனையும் ஆராய்ச்சிக்குப் பொருந்தாமல் வெறுங்கற்பனையாக உள்ளன. இதுபற்றி முன்னமே கூறினோம்.