பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

சங்கச் செய்யுட்கள், அக்காலத்து மக்கள் வாழ்க்கை வரலாற்றையறிவதற்குப் பேருதவியாக இருக்கின்றன.

புலவர்கள் பொதுவாக அக்காலத்தில் வறியவராக இருந்தார்கள். அவர்கள் செல்வர்களையும் அரசர்களையும் அணுகி அவர்களுடைய சிறப்புகளைப் பாடிப் பரிசுப் பெற்று வாழ்ந்தார்கள். புலவர்கள் பொதுவாக யானைகளையும், குதிரைகளையும், தேர்களையும் (வண்டிகள்) பரிசாகப் பெற்றார்கள். பரிசாகப் பெற்ற இவைகளை விற்றுப் பொருள் பெற்றனர். சில சமயங்களில் அரசர்கள் புலவர்களுக்கு நிலங்களையும் பொற்காசுகளையும் பரிசாகக் கொடுத்தார்கள். பொருள் வசதியுள்ளவர்கள்-அரசர் வாணிகர் பெருநிலக்கிழார் போன்றவர்கள் கல்வி இன்பத்துக்காகவே கல்வி பயின்று புலவர்களாக இருந்தார்கள். அவர்களும் அகப்பொருள் புறப்பொருள்களைப் பற்றிச் செய்யுள் இயற்றினார்கள். ஆனால், அக்காலத்தில் கல்வி கற்றவர் தொகை மிகக் குறைவு. பொதுவாக நாட்டு மக்கள் கல்வியில்லாதவர்களாகவே இருந்தார்கள்.

பொதுவாகப் புலவர்களுடைய வாழ்க்கை வறுமையுந் துன்பமுமாக இருந்தது. பிரபுக்கள் எல்லோரும் அவர்களை ஆதரிக்கவில்லை. சிலரே ஆதரித்தார்கள். அவர்கள் பெற்ற சிறுபொருள், வாழ்க்கைக்குப் போதாமலிருந்தது. ஆகவே புலவர்கள் புரவலர்களை நாடித் திரிந்தனர். அவர்களில் நல்லூழ் உடைய சில புலவர்கள் பெருஞ்செல்வம் பெற்று நல்வாழ்வு வாழ்ந்தார்கள். கொங்குநாட்டுப் புலவர் வாழ்க்கையும் இப்படித்தான் இருந்தது.

சங்ககாலத்தில் இருந்த கொங்கு நாட்டுப் புலவர்களைப் பற்றிக் கூறுவோம்.