பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

179


அஞ்சி யத்தைமகள் நாகையார்

இவர் பெண்பால் புலவர். நாகை என்பது இவருடைய பெயர். அஞ்சி யத்தைமகள் என்பது சிறப்புச் சொல். தகடூர் அதிகமான் அரசர்களில் அஞ்சி என்னும் பெயருள்ளவர் சிலர் இருந்தார்கள். அந்த அஞ்சியரசர்களில் ஒருவருடைய அத்தை மகள் இவர். ஆகையால் அஞ்சி யத்தைமகள் நாகையார் என்று கூறப் பெற்றார். அத்தைமகள் என்பதனால் அஞ்சியினுடைய மனைவி இவர் என்று சிலர் கருதுகின்றனர். அஞ்சியின் அவைப் புலவராக நெடுங்காலம் இருந்த ஔவையாரிடம் இந்த நாகையார் கல்வி பயின்றவராக இருக்கலாமோ?

இவருடைய செய்யுள் ஒன்று அகநானூற்றில் 352-ஆம் செய்யுளாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. குறிஞ்சித் திணையைப் பாடிய இந்தச் செய்யுள் இனிமையுள்ளது. பாறையின் மேல் இருந்து ஆடுகிற மயிலுக்குப் பின்னால் பெரிய பலாப்பழத்தை வைத்திருக்கிற கடுவன் குரங்கு, ஊர்த் திருவிழாவில் விறலியொருத்தி பரத நாட்டியம் ஆடும்போது அவளுக்குப் பின்னாலிருந்து முழவு கொட்டும் முழவன்போலக் காட்சியளித்ததை இவர் இச்செய்யுளில் கூறுகிறார். மணப் பெண் ஒருத்தி தன்னுடைய தோழியிடம் தன்னுடைய மன நிறைந்த மகிழ்ச்சியைக் கூறியதாக இவர் கூறியுள்ளது படிப்பவருக்கு பேருவகை தருகின்றது. அஞ்சியரசன்மேல் புலவர் பாடிய செய்யுளுக்கு இசையமைத்துப்பாடும் பாணனுடைய இசையில், இசையும் தாளமும் ஒத்திருப்பது போலவும் காதலன்-காதலியின் திருமண நாள் போலவும் அந்த மணப்பெண் நிறை மனம் பெற்றிருந்தாள் என்று இவர் கூறுவது படித்து இன்புறத்தக்கது.