பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

தவறு இது. இதை ணி என்று கொள்வதே பல விதத்திலும் பொருத்தமாகத் தோன்றுகிறது. இந்தச் சாசனத்தில் வேறு மூன்று ணகர எழுத்துக்கள் தெளிவாகப் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த ணி எழுத்தைக் கற்றச்சன் செம்மையாகப் பொறிக்காமல் விட்டு விட்டான்.

கடைசி (14-வது) எழுத்து ய அல்லது ய் என்பது. இதில் சந்தேகத்துக்கு இடமேயில்லை. இந்த மூன்று எழுத்துக்களையும் சேர்த்து மணிய் என்று வாசிக்கலாம்.

இந்தப் பிராமி எழுத்தின் முழு வாசகமும் இவ்வாறு அமைகிறது.

“எழுத்தும் புணரு(ர்)த்தான் மணிய
வண்ணக்கன் தேவன் சாத்தன்,”

மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன் (முனிவருக்கு இக்குகையைத் தானம் செய்தது மட்டும் அல்லாமல், இந்த எழுத்துக்களையும்) புணர்த்தினான் (எழுதினான், பொறித்தான்) என்பது இதன் கருத்து.

விளக்கம்: மணிய் வண்ணக்கன் என்பது மணிக்கல் வண்ணக்கன் என்று பொருளுள்ளது. இகர ஈற்றுச் சொல்லுடன் யகரமெய் சேர்த்து மணிய் என்று எழுதப் பட்டிருக்கிறது. இப்படி எழுதுவது அக்காலத்து வழக்கம். கொங்கு நாட்டில் விலையுயர்ந்த மணிக்கற்கள் அக்காலத்தில் அதிகமாகக் கிடைத்தன.

வண்ணக்கன் என்பது பொன் வெள்ளி நாணயங்களின் பரிசோதகன் என்னும் பொருள் உள்ள சொல். சங்க இலக்கியங்களில் சில வண்ணக்கர்கள் கூறப்படுகின்றனர். புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் என்னும் புலவர் நற்றிணை