பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222


விளக்கம் : கருவூர், கொங்கு நாட்டை. யரசாண்ட சேர அரசர்களுக்குச் சங்க காலத்தில் தலைநகரமாக இருந்தது என்பதை அறிவோம். அவ்வூர் அக்காலத்தில் பேர்போன வாணிகப் பட்டணமாக இருந்தது. இங்கு, கிரேக்க ரோமர்கள் (யவனர்கள்) வந்து வாணிகஞ் செய்தார்கள். இவ்வூரில் பொன் வாணிகஞ் செய்தவர்களில் ஒருவர் பெயர் பொத்தி என்பது. பொத்தன், பொத்தி என்னும் பெயர் சங்க காலத்தில் வழங்கி வந்தது. பொத்த குட்டன் என்னுந் தமிழன் ஒருவன் இலங்கை அநுராதபுரத்திலே செல்வாக்குள்ளவனாக இருந்தான். அவன், தான் விரும்பியபடியெல்லாம் இலங்கை மன்னர்களைச் சிம்மாசனம் ஏற்றினான் என்று மகாவம்சத்தின் பிற்பகுதியான சூலவம்சம் என்னும் நூல் கூறுகிறது. பொத்தி என்னும் புலவர் ஒருவர் இருந்தார். அவர் பொத்தியார் என்று கூறப்படுகிறார். அவர் இயற்றிய செய்யுட்கள் புற நானூற்றில் (புறம். 217, 220, 221, 222, 223) உள்ளன.

எனவே இந்த எழுத்துகளில் காணப்படுகிற பொன் வாணிகனுடைய பெயர் பொத்தி என்பதில் ஐயமில்லை. மகாதேவன் நெத்தி என்று படிப்பது தவறு. நெத்தி என்னும் பெயர் இருந்ததாகச் சான்று இல்லை. டி.வி. மகாலிங்கம் நேர்த்தி என்று படிப்பதும் பொருத்தமாக இல்லை.

அதிட்டானம் என்பது அதிஷ்டானம் என்னும் சொல்லின் தமிழாக்கம். இங்கு இது இந்தக் குகையைக் குறிக்கின்றது.

***


புகழூர்ச் சாசனம் இன்னொன்றைப் பார்ப்போம். இது சாசன எழுத்து இலாகாவில் 1927-28 ஆம் ஆண்டு தொகுப்பில் 346ஆம் எண்ணாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஒரே வரியில் இருபத்தொரு பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. பாறைக் கல்லில் புரைசல்களும்