பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

 கூறுகின்றது. "பாடிப்பெற்ற பரிசில் : சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து நன்கு வென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக்கோ ” என்பது அந்த வாசகம்.

நன்றா என்னும் பெயர் பிற்காலத்தில் நணா என்று மாறி வழங்கிற்று. திருஞானசம்பந்தர் கொங்கு நாட்டுத் திருநணா என்னும் திருப்பதியைப் பாடியுள்ளார். சுவாமி பெயர் சங்கமுக நாதேசுவரர், தேவியார் வேதமங்கையம்மை. பவானி ஆறு காவிரியாற்றுடன் சேருமிடமாகையால் இந்த இடம் பவானி கூடல் என்று பெயர் வழங்கப்படுகிறது. இப்போது ஊராட்சி மலை என்று பெயர் கூறப்படுவது நன்றாமலையாக இருக்குமோ? இது ஆராய்ச்சிக்குரியது.

படியூர்

கொங்கு நாட்டிலிருந்த படியூர் விலையுயர்ந்த மணி களுக்குப் பேர் போனது. இப்போதைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் தாராபுரம் தாலுகாவில் படியூர் இருக்கிறது. வட கொங்கு நாட்டிலிருந்த புன்னாட்டில் விலையுயர்ந்த நீலக் கற்கள் கிடைத்தது போலவே படியூரிலும் நீலக் கற்கள் (Beryl) கிடைத்தன. சங்கச் செய்யுள்களில் படியூரைப் பற்றிக் காணப்படவில்லை. ஆனால், கொங்கு நாட்டில் விலையுயர்ந்த திருமணிகள் கிடைத்ததை அக் காலத்துப் புலவர்கள் கூறுகின்றனர். கொங்கு நாட்டில் உழவர் நிலத்தை உழுகிற போது சில சமயங்களில் திருமணிகள் கிடைத்தன என்று அரிசில் கிழார் கூறுகிறார். "கருவீ வானம் தண்தளி சொரிந் தெனப் பல்விதை உழவில் சில்லேராளர்... இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம். அகன்கண் வைப்பின் நாடுகிழவோயே” (பதிற்று, 8 ஆம் பத்து 6: 10-15.) இதற்குப் பழைய உரை காரர் இவ்வாறு விளக்கங் கூறுகிறார்: “தண்டளி" (மழை) சொரிந்தென ஏராளர் கதிர்த் திருமணி பெறும் நாடெனக் கூட்டி, மழை பெய்தலானே ஏராளர் உழுது விளைத்துக்