பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

“நாலூர்க் கோசர்” (குறும். 15:3) துளுநாட்டில் நால்கூர் என்னும் ஊர் இருக்கிறது. (நால்கு-நான்கு).

போர் வீரர் ஆகையால் இவர்கள் கள் அருந்தினார்கள் இவர்களுடைய வீடுகளில் மதுபானம் இருந்தது. மதுவருந்திக் குரவைக் கூத்தாடினார்கள். “நனைக் கள்ளின் மனைக்கோசரி, தீந்தேறல் நறவு மகிழ்ந்து, தீங்குரவைக் கொளைந்தாங் குந்து” (புறம். 396:7-9)

கோசர் கொங்கு நாட்டிலும் இருந்தனர். அவர்கள், சேரன் செங்குட்டவன் கண்ணகிக்குப் பத்தினிக் கோட்டம் அமைத்ததையறிந்து கொங்கு நாட்டிலும் கண்ணகிக்கு விழாச் செய்தனர். இதனை, “அதுகேட்டுக் கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்து நங்கைக்கு விழவொடு சாந்தி செய்ய மழை தொழிலென்றும் மாறாதாயிற்று” என்று சிலப்பதிகாரம் உரைபெறு கட்டுரை கூறுவதிலிருந்து அறியலாம். கொங்கு நாட்டுக் கோசர், பொறையரசருக்கு அடங்கி அவர்களின் கீழ் ஊழியஞ் செய்திருந்தனர் என்று தோன்றுகிறது.

கோயம்புத்தூர் என்பது கோசர் பெயரால் ஏற்பட்ட ஊர். கோசர் என்பது கோயர் என்றாகி கோயம்புத்தூர் என்று வழங்குகிறது. கோயன் + புத்தூர் – கோயன்புத்தூர். பிறகு இப்பெயர் கோயம்புத்தூர் என்றாயிற்று.

சோழ நாட்டில் ஓர் ஊரை யரசாண்ட அஃதை என்பவன் இடத்திலும் கோசர் இருந்தனர். அகம்-113; 4-7.