பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தெரியவில்லை. சோழ பாண்டியர் ஒன்று சேர்ந்து வந்து இவன்மீது போர் செய்தனர் என்றும் அவர்களை இவன் வென்று ஓட்டினான் என்றும் கபிலர் கூறுகிறார்.[1] சேர அரசர் கொங்கு நாட்டுச் சிற்றரசருடன் நாடு பிடிக்கப் போர் செய்த போதெல்லாம் சேர பாண்டியர் கொங்கு நாட்டுச் சிற்றரசருடன் சேர்ந்து சேர அரசரை எதிர்த்தார்கள். அவ்வாறு சோழ பாண்டியர் சேரரை எதிர்த்த ஒன்றைத்தான் இது கூறுகிறது. செ. க. வா. ஆதன் கொங்கு நாட்டுச் சிற்றரசர்களோடு போர் செய்து வென்று அவர்களுடைய ஊர்களைக் கைக் கொண்டான் என்பது தெரிகின்றது. இவனுடைய கொங்கு இராச்சியம் சிறிதாக இருந்ததைப் பெரியதாக்க வேண்டும் என்று இவன் கருதிப் போர் செய்து வென்று சில நாடுகளை இவன் தன் இராச்சியத்தில் சேர்த்துக் கொண்டான் என்பதைக் கபிலர் கூறுகிறார். சேரலாதனுக்குச் சூரியனை ஒப்புமை கூறுகிறவர் சேரலாதனுக்குச் சூரியன் இணையாக மாட்டான் என்று கூறுகிறார்.[2] பல அரசர்களை வென்று


  1. ‘குன்று நிலை தளர்க்கும் உருமிற்சீறி, ஒரு முற்றிருவர் ஓட்டிய ஒள்வாள், செருமிகுதானை வெல்போ ரோயே’, (7ஆம் பத்து. 3:10-12) ஒருமுற்று- ஒன்றாகச் சேர்ந்து முற்றுகையிட்டு, இருவர்சோழ பாண்டியர்.
  2. “இடஞ் சிறிதென்னும் ஊக்கந் துரப்ப, ஒடுங்கா வுள்ளத் தோம்பா ஈகைக், கடந்தடு தானைச் சேரலாதனை, யாங்ஙன மொத்தியோ வீங்குசெலல் மண்டிலம்” (புறம். 8:3-6)

    “நாடுபதி படுத்து நண்ணார் ஓட்டி
    வெருவரு தானை கொடு செருப்பல கடந்து
    ஏத்தல் சான்ற இடனுடை வேள்வி
    ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி”

    (7 ஆம் பத்து, பதிகம் அடி, 4-7)