பக்கம்:கொடி முல்லை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 4

அழகன் நினைவெல்லாம் அவள்பால் இருந்தது.

குன்றுகளைப் பிளக்கின்றார் இளைய தச்சர்:
கொல்லன்கல் உளிவடித்து வழங்கு கின் றான்;
நின்றிருக்கும் சோம்பேறி ஆளைப் பார்த்து
'நில்லாதே! போ! போ போ!' என்றான் வெண்ணெய்க்,
குன்றைப்போல் மேலாடை தலையில் சுற்றிக்
கொண்டிருக்கும் ஆளோட்டி; தட்டைப் பந்தர்
ஒன்றிரண்டிற் குள்ளிருந்து கலைக்கோ யிற்குச்
சிலைசெய்வோர் உளிஓசை எழுப்பு கின்றார்.

சிற்றுளியை எடுத்தழகன் செதுக்கு கின்றான்,
செய்தொழிலில் அவன் நினைவு செல்ல வில்லை;
சற்றமர்ந்தான் பசுந்தென்னைக் கீற்றின் மீது;
தன்மனத்திற் கேதேதோ சொல்லிப் பார்த்தான்;
பெற்றவள்சொற் கேளாது மண்ணிற் கேகும்
பிள்ளையைப்போல் அவன் மனது சோலை கண்ட
நற்றமிழாள் கொடிமுல்லை யாளைத் தாவி
நாலாறு காதமொரு நொடிக்குள் பாயும்!

நலம்பாடி அங்குவந்த தறியான் தச்சன்;
நாட்டத்தைக் கூரையின் மேல் நிறுத்தி, 'என்றன்
கலைக்குயிர் நீ! என்வாழ்வின் இன்பம் நீயே;
கண்ணும் நீ! கற்பனையும் நீயே!' என்றான்;
தலைசாய்த்து முழந்தாளைத் தழுவிக் குத்திச்
சாய்ந்தாடிக் கொண்டிருந்தான்; மூச்செ றிந்தான்.
'அலைமோதும் கடல்கண்டேன் தோழா!' என்று
நலம்பாடி அவனருகில் வந்தான்; நின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/14&oldid=1252871" இலிருந்து மீள்விக்கப்பட்டது