பக்கம்:கொடி முல்லை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 5



மகளுக்கு மணம் முடிக்குமாறு
அரசி மன்னவனை வேண்டினாள்.

செவ்வல்லி தீச்சுடர் போல் மலரும்; மேற்குத்
திசைமறையும் பரிதிகண்டு முளரி கூம்பும்;
அவ்வோடை பூக்காத ஆம்பல் நோக்கி
அண்டிவரும் நீர்ப்பாம்பு காதல் பேச;
'எவ்வுயிரும் காதலியை மறப்ப தில்லை’
எனத்திங்கள் கீழ்வானில் ஒளியைப் பாய்ச்சும்!
அவ்வேளை மாமல்லன், 'புலவோய்! நல்ல
அடைத்தேனைத் தமிழ்ப்பாட்டில் பிழிக!' என்றான்.

"விளங்காத சொல்நிறைந்த பாட்டைக் கேட்டு
'மிக இனிமை மிக இனிமை' என்பார் உண்டு;
களஞ்சிந்திக் கிடக்கின்ற பதரைப் பார்த்துக்
களிப்படையும் சிறுவரிவர்; கல்ம னத்தை
இளகவைப்ப தெவர் பாட்டு? போர்மு கத்தே
எழுச்சியுறச் செய்வதியார் பாட்டு? மற்றும்
உளம் வாட்டும் கொடுந்துயரை மாற்று கின்ற
ஒசைநிறை பாட்டெங்கள் தமிழ்ப்பாட் டேயாம்!"

என்றுரைத்தாள் பல்லவநாட் டரசி. 'மக்கள்
ஏன் உணர வில்லை?' யென்றான் அரசன். 'வந்தோர்
கொன்றுவிட்டார் பகுத்தறிவைக் கடவுள் பேரால்
கூசாமல் கதைசொல்லி; மக்கட் குள்ளே
இன்றிருக்கும் அளவில்லாச் சாதிச் சண்டை,
என் கடவுள் உயர்ந்தவரென் றெதிர்க்கும் சண்டை
நன் றாமோ?' எனக் கேட்டான் புலவன். வேந்தன்,
நாமாள இவை இன்றேல் முடியா தென்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/16&oldid=1252877" இலிருந்து மீள்விக்கப்பட்டது