பக்கம்:கொடி முல்லை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிதாசன்

11


எய்வதற்குக் குறிபார்த்த வேடன் போற்பேச்(சு)
எடுத்திட்டாள் செங்காந்தள்; அரசன் நோக்கிச்
'கொய்யாப்பூக் கொடிமுல்லை நீலக் கண்கள்
குளிர்மையற்றுப் போனதைநான் கண்டேன்! கண்டேன்!
மைதீட்ட மறுக்கின்றாள்; நாறும் முல்லை
மலர்தொடுக்க வெறுக்கின்றாள், கனாக்காண் கின்றாள்;
மெய்ப்பாட்டை நான் கண்டேன்; கூறு கின்றேன்;
விரைவினிலே மணம்முடிப்பீர் மகளுக்' கென்றாள்.

'வயதுவந்த பெண்களுடல் மாறி மாறி
வளர்வதிலும் தளர்வதிலும் புதுமை இல்லை;
கயல்விழியாள் கொடிமுல்லை மீது விணே
கண்டபடி உளறாதே’ என்றான் மல்லன்.
இயன்மொழியில் பேர்பெற்ற புலவன் சொல்வான்:
'எழுகின்ற கலைக்கோயில் எடுத்த பின்னர்
மயிலியலாள் கொடிமுல்லை யாளை வேந்தன்
வழங்கிடுவான் மானவன்மற் கஞ்சேல்!' என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/17&oldid=1252878" இலிருந்து மீள்விக்கப்பட்டது