பக்கம்:கொடி முல்லை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 6



மாணவன்மன் மன்னன் மகனை விரும்பினான்:
அவள் மறுத்தாள்.

தீங்குயில்கள் மரக்கிளையில் சிறக டிக்கும்:
தென்னையிலே கூடமைக்கும் காக்கை: காயைத்
தாங்காமல் அசைந்தாடும் வாழை மீது
தத்தையினை பொன்னூசல் ஆடும்; ஈந்தில்
தூங்குகின்ற புற்கூட்டில் சாம்பற் சிட்டு
தொத்திவிழும் அணிலிணையைப் பழிக்கும்! மாலை
ஆங்குவந்தாள் கொடிமுல்லை; யாழின் நாணை
அசைத்திட்டாள்; இசைவெள்ளம் எங்கும் பாயும்!

மயிலொத்த கொடிமுல்லை ஆட்டம் கண்டே
மரங்கொத்தி துணைத்தாளம் சேர்க்கும்; குன்றின்
அயலோடும் காட்டாறு முழவை மீட்டும்
அம்பைப்போல் மீன் கொத்தி அவள் கண் கண்டு
கயலென்று பாய்ந்துவரும்! அந்த வேளை
கல்வீசிப் புள்ளோட்டி வன்மன் வந்தான்.
வெயிலொளியைக் காட்டுகின்ற குழைக ளாட
"மிகமகிழ்வு வருக' என்றாள்; எதிர்கொண் டாளே!

'ஆட்டத்தை நானிங்குக் கண்டேன்; தோகை
அழகுமயில் அசைந்தாடிற் றடடா! நீல
நாட்டத்தின் சுழற்சி'யென்றான். 'பொய்! பொய்!'என்றாள்.
'நலமறிவேன்’ என்றுரைத்தான். 'பகைவி ரட்டி
ஓட்டுவதில்' எனச் சிரித்தாள். 'விடியற் காலை
உவமையிலாப் பேரெழிலே! தமிழ்த்தாய் மக்கள்
நோட்டத்தில் வல்லுநர்கள்' என்றான் வன்மன்.
கொடிமுல்லை நூறுமுறை'உண்மை என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/18&oldid=1252879" இலிருந்து மீள்விக்கப்பட்டது