பக்கம்:கொடி முல்லை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 7

அழகன் அவள் உருவை ஏட்டில் தீட்டினன்

'அவளை அடைய ஒரு வழிகாட்டு' எனப் புலவனைக்

கேட்டனன்

ரிகைப்பூப் போட்டகரு வானச் சேலை
தனையுலகக் கட்டிலின்மேல் போர்த்தாள்; காய்ந்த
இரும்பொத்த தொழிலாளி, ஊசல் சோற்றை
இரந்துண்டு வாழ்த்திடுவோர், உண்ட சோறு
செரிக்காத துயரொன்றே கண்ட செல்வர்,
மற்றுள்ள உயிர்மீதும் உறக்கம் என்னும்
அரிசிஎடைப் பொடிஇயற்கை இறைத்தாள்: 'இந்தா!
உன் வரிசை செல்லா:தென் றழகன் சொன்னான்.

நலம்பாடி குறட்டைவிட்டுத் தூங்கி விட்டான்.
நமதழகன் ஏதேதோ முணுமு ணுத்தான்;
தலையணைமேல் கையூன்றிப் பிடரி தாங்கிக்
கிணறேறத் தத்தளிக்கும் நல்ல பாம்பின்
நிலையினிலே படுத்திருந்தான்: ஏதோ வொன்றை
நினைத்தெழுந்தான் படுக்கைவிட்டு; விளக்கைத் தூண்டிப்
பலநிறத்தைக் குழைத்தெடுத்தான்; தூங்கு கின்ற
பாவலனைப் பார்த்திட்டான்: தீட்டி னானே!

படமெடுத்தான்; நிறுத்திவைத்தான்; தலையைத் தாழ்த்திப்
பரிவோடு பார்த்திட்டான்; களித்தான்; 'உன்னை
அடையும் நாள் என்வாழ்வின் திருநாள் என்றான்.
அவ்வேளை நலம்பாடி விழித்துக் கொண்டான்:
அடிமேலோர் அடிவைத்து வந்தான்; 'ஆஆ!
அச்சடித்து விட்டாயே! நமது நாட்டுக்
கொடிமுல்லை இளவரசி யாளைத் தீட்டக்
கூறினனோ நமதரசன் மல்லன்?' என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/20&oldid=1252894" இலிருந்து மீள்விக்கப்பட்டது