பக்கம்:கொடி முல்லை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

கொடிமுல்லை

மோதுகடல் சூழிலங்கை நாட்டில் எந்த
மூலையிலோ வாழ்ந்திருப்பாய், துருத்தி யாலே
ஊதுகின்ற கொல்லனுக்கேன் குரங்கின் சேட்டை?
உன்மனதில் அவள் நினைவை மாற்'றென் றானே!

கற்றச்சன் கூறுகின்றான் : 'தோழா! உண்மைக்
காதலைநீ அறியாயோ? வாழ்க்கை யென்னும்
நற்றேரின் அச்சவளாம்! நானோ ஆணி!
நம் தமிழர் வாழ்ந்தமுறை இதுதான் நண்பா!
கற்றவனே, இப்படி நீ பழம்பஞ் சாங்கம்
கடைப்பிடித்தால் இவ்வுலகக் கல்லார் மீது
குற்றமொரு நாளுமில்லை; அடிமை வீழ்ந்து
குடிகெட்டுப் போனதிலோ புதுமை இல்லை!

கண்ணில்லை காதலுக்கு; மேலும் கீழும்
கணக்கில்லை தமிழருக்கு? நற்கு லத்துப்
பெண்ணின்பம் வேறோசொல்? படித்த நீயே
பிரித்துரைத்தல் சரிதானோ? உன்னைப் போல
மண்மீது வாழ்கின்றார் தன்ன லத்தார்;
வான்கொள்ளி அவர் தலைமேல் வீழ்க! இந்நாள்
பெண்ணுரிமை இல்லையெனில் நமது மக்கள்
பேசுகின்ற விடுதலைக்கென் மதிப்போ? சொல்வாய்!

அவளுள்ளம் சோலையில் நான் கண்டேன்! கண்டேன்!
என்னறிவை அவளிடத்தே விட்டு வந்த
தவளறிவாள்; என் வாழ்வின் தழைபூஞ் சோலை!
தமிழின்பம் அவளுதடு! குளிர்ந்த நீலக்
குவளைமலர் அவள்கண்கள்! இடையோ ஈயார்
கூறுமொழி! பேச்சிளநீர்! வாயோ அல்லி!
தவளப்பல் அவள் நகையைக் கண்டால் வாழ்வேன்;
தப்புவிக்க ஒருவழிநீ செய்வாய் தோழர!'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/22&oldid=1252897" இலிருந்து மீள்விக்கப்பட்டது