பக்கம்:கொடி முல்லை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 9

கொடிமுல்லை அழகனை நினைந்து ஏங்கினாள்,
மறைந்த புறா வந்தது.

லகணிமேல் இருகையைக் கட்டி ஊன்றிப்
படுத்திருந்தாள் கொடிமுல்லை; அவள்மைக் கண்கள்
செலவில்லை எதன்மீதும்; தோட்டத் துள்ளே
இசைக்கின்ற தீங்குயிலை 'சீச்சி!' என்றாள்?
'அலைகின்றாய் என்மனம்போல்' என்றாள் சன்னல்
அருகினிலே படர்ந்தேறும் கொடியைப் பார்த்து;
'கலைஞன்என் உளம்பறித்தான்; அவனை என்றன்
கைச்சிறைக்குள் அடைக்கும் நாள் எந்நாள்?' என்றாள்.

“என்னுள்ளம் அவனை விட்டு நீங்கா தென்றும்;
ஏங்குகின்றேன் : எனக்குதவி செய்வார் யாரே?
தென்னையில் இணைந்திருக்கும் பெட்டைச் சிட்டே!
சென்றெனது நிலையுரைப்பாய்; அந்தோ! நானும்
உன்னைப்போல் களிப்படைய வேண்டா வோ?சொல்!
உதவிடுவாய்; இங்குள்ள மக்கள் எல்லாம்
தந்தலத்தை வேற்கொண்டார்: என்றன் உள்ளத்
தகையுரைக்க அஞ்சுகின்றேன்; செல்க!' என்றான்.

கிண்ணத்தில் தேன் வார்த்து வந்தாள் அல்லி?
'கிழித்தபலாச் சுளையோடு கனிமா வாழை
உண்'ணென்று கெஞ்சிநின்றாள்; காய்ந்த பாலில்
'ஒருசிறிது குடி' யென்றாள். மீண்டும் மீண்டும்
புண்ணினிலே நெருப்புற்றாள் போலெ ழுந்தே
கொடிமுல்லை உரைத்திட்டாள் : "பேதாய்! என்றன்
எண்ணத்தை அறியாமல் 'உண் உண்’ என்று
வதைக்கின்றாய்; எழுந்தோடிப் போவாய்' என்றாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/26&oldid=1252960" இலிருந்து மீள்விக்கப்பட்டது