பக்கம்:கொடி முல்லை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 10


கிளியைக் கூண்டிலடைக்க
மானவன்மனுக்கு அரசி ஆலோசனை கூறுகிறாள்.

பொன்வேண்டு மென்கின்றார் ஏழை மக்கள்;
புகழ்வேண்டு மென்கின்றார் ஈயாச் செல்வர்;
முன்போலத் தமிழர்களை நுங்காய் எண்ணி
விழுங்கிவிட முனைகின்றார் ஒண்ட வந்தார்;
தன்னிளமைச் செங்காந்தள் வேண்டுமென்று
தவிக்கின்றாள் சோலையிலே! அந்த வேளை
பொன்மொழியான் நலம்பாடி அங்கு வந்தான்;
‘புதுமையுண்டோ இளவரசி போக்கில்?’ என்றான்.

ஒளிஇழந்து மானவன்மன் அங்கு வந்தான்;
உட்கார்ந்தான்; மூச்செறிந்தான்; தலைஇ ருந்த
புளிமூட்டை இறக்கிவைத்த வழிப்போக் கன்போல்
புண்பட்ட உள்ளத்தைத் திறந்தான்; 'கன்னித்
தளிர்மேனி கொடிமுல்லை மனத்தை யாரோ
தட்டிக்கொண் டோடிவிட்டான்' என்றான்; மன்னி
'கிளிபறப்ப தெங்குண்டு? மீண்டும் சென்று
கெஞ்சிப்பார்! இல்லையென்றால் மிஞ்!' சென் றாளே.

தந்நலத்தை விரும்புகின்ற தந்தை தாய்மார்
தமிழகத்தில் இருந்ததில்லை; இச்சை போலத்
தன் துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வோர்
தமிழில்லம் பெற்றிருந்த தாலே நாட்டில்
துன்பமெனும் பேச்சில்லை; அடிமை இல்லை,
தோள்வலிமை குன்றியது மில்லை; இந்நாள்
பொன்னிருந்தால் கிழவனுக்கும் பெண்கொடுப்பார்!
காதலென்றால் 'பைத்தியமோ' என்பார் பெற்றோர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/29&oldid=1253045" இலிருந்து மீள்விக்கப்பட்டது