பக்கம்:கொடி முல்லை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 11


காதலர்கள் கூடித் திளைத்தனர்.
மறைந்திருந்து மாணவன்மன் அவர்களைக் கண்டான்.

ள்ளத்து நீர்மீதும், தென்னை வாழைப்
பசுமட்டை செடிகொடிகள் மீதும் தூய
வெள்ளிஒளி பூசிஎழும் திங்கள்! காதல்
வெற்றிபெறக் கொடிமுல்லை நின்றி ருந்தாள்:
கள்ள வழி நிலவறையின் பக்கம் சென்றாள்;
‘இன்னும்ஏன் அல்லிவரக் காணோம்?' என்றாள்;
உள்ளத்தே அவளறியா இன்பம் துள்ள
உட்கார்ந்தாள்; ஏதேதோ எண்ண மிட்டாள்;

'கண்னே! நீ அவர்கண்டால்கீழே நோக்கும்
வழக்கத்தைக் கட்டோடு விலக்கி' டென்றாள்;
'பெண்குலத்திற் குயர் அணியே! நாணே! என்னைப்
பிரிந்தோடிப் போ!' என்றாள்; 'வானில் ஊரும்
தண்மதியே! நீதோற்று விட்டாய்' என்றாள்!
'தழைத்திடுக உன்வெற்றி' என்று சொல்லிக்
கண்பொத்திப் பின்னிருந்தான் அழகன்! வெட்கிக்
கார்முகிலில் போய்மறையும் வானத் திங்கள்!

'பவளமல்லி நீ' என்றான் அழகன்; 'நீரோ
அதில்மொய்த்துப் பாடுகின்ற சுரும்பர்’ என்றாள்.
'குவளைப்பூ நீ' என்றான்; 'நீரோ அந்தக்
குட்டையிலே தேங்கும்நீர்' என்றாள். பூத்துத்
துவளுகின்ற கொடிமுல்லை நீயே' என்றான்;
'கொழுகொம்பு நீர்' என்றாள். விம்மும் தோளை
அவனுடல்மேல் அவள்சாய்த்தாள்; அடடா, அங்கே.
அழிந்ததொரு செங்கருப்பங் காடு தானே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/31&oldid=1253049" இலிருந்து மீள்விக்கப்பட்டது