பக்கம்:கொடி முல்லை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கொடி முல்லை


நெடுநேரம் கழிந்தோடி விட்டதென்று
நினைவூட்டக் கிளைகூவும் கீச்சான்; வெள்ளி
தொடுவானில் சீய்த்தெழும்பும்! அழகன் மார்பில்
தோய்ந்திருந்த கொடிமுல்லை கலங்கி நின்றாள்;
‘பிடிபடுவோம் இனி இங்கு நாமிருந்தால்;
பிரிந்திடுவோம் என்னுயிரே!' என்றாள்; நாளைத்
தடைஇன்றிக் கூடிடுவோம்; அஞ்சேல்! என்றன்
தமிழ்ச்சுவையே! போய்வருக!' என்ற ணைத்தான்.

அடியெடுத்து வைத்திட்டாள்; திரும்பி வந்தாள்;
அணைத்திட்டாள்; முத்தமழை பொழிந்தாள்: வேடன்
அடிபட்டுத் தத்தளித்துத் தப்பிச் செல்லும்
புள்ளைப்போல் அவளவனை விட்டுச் சென்றாள்.
நடந்துசெல்லும் அவள்முதுகின் எழிலைப் பார்த்து
'நாளை வரை நான் பொறுக்கப் போமோ? என்றான்.
கொடுமையிலும் கொடுமையடா, அந்தோ, காதல்
கொண்டவர்கள் கூடிப்பின் பிரிந்து செல்லல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/34&oldid=1253072" இலிருந்து மீள்விக்கப்பட்டது