பக்கம்:கொடி முல்லை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இயல் 12


மாணவன்மன் மறைந்திருந்து அழகன்மேல் வாளோடு
பாய்ந்தான். முகமூடி யணிந்த ஒருவன் காத்தான்.
நலம்பாடியிடம் அழகன் நடந்ததைக் கூறினான்.

ண்ணத்தைத் தன்னருகே விட்டுச் செல்லும்
எழிலுருவைப் பார்த்தழகன் கல்லாய் நின்றான்;
பண்மீட்டும் முன்னெழுந்த பறவை யொன்று;
பால்நிலவோ அடிசாயும்; வீட்டை நோக்கிக்
கண்ணிழந்து நடக்கின்றான் அழகன். அங்குக்
காத்திருந்த மானவன்மன் பதுங்கி வந்தான்;
'பெண்வேட்டைப் பரிசிந்தா!' என்று கையில்
பிடித்திருந்த வாளோடு முதுகில் பாய்ந்தான்.

பின்புறமாய் அவன்கையில் இருந்த வாளைப்
பிடுங்கிக்கொண் டோருருவம் சிரிக்கக் கண்டான்;
'என்னை இங்குத் தடுப்பதியார்?' என்றான் வன்மன்
முகமூடி 'இரையாதே; கொல்வேன்; மான
வன்மன்நீ என்பதைநான் அறிவேன்; இங்கு
வந்ததையும் நான் அறிவேன்; சீச்சி! நீயோ
முன்வாழ்ந்த தமிழ்மறவர் பெயர்கெடுக்க
முளைத்திட்டாய்: ஓடிப்போ; பிழைப்பாய்' என்றான்.

தன்செயலை எண்ணிவெட்கி மான வன்மன்
தலைதாழ்த்தி ஓடிவிட்டான். அழகன் சொல்வான்:
என்னுயிரை எங்கிருந்தோ வந்து காத்தீர்!
'இதற்கென்ன கைம்மாறு செய்வேன்?' என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/35&oldid=1253075" இலிருந்து மீள்விக்கப்பட்டது