பக்கம்:கொடி முல்லை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

கொடிமுல்லை


'என் மனம்போல் கொந்தளிக்கும் கடலே, கேள்நீ;
என்ன பிழை செய்தேன்நான்? ஆரா யாமல்
உன்கரையின் தலைவன்போத் தரையன் மூவர்
உயிருண்டான்! இதுமுறையோ? நீதான் சொல்லேன்?
நன்மையினை நிலைநாட்ட வேண்டு மென்றால்
நாட்டிலுள்ளோர். இதைஉணர வேண்டும்; சொன்னேன்!
உன்வலிமை காட்டிடுவாய்; எழுந்து பொங்கி
ஊரழிப்பாய்; பல்லவனை ஒடுக்கு வாயே!

'காராகி வான்தவழு கின்றாய் நீயே!
கடும்பஞ்சம் போக்குகின்ற அன்னை நீயே!
பாரிலுள்ளோர் நீவெகுண்டால் எதிர்க்கப் போமோ?
பலஉயிர்க்கும் தாய்நீயே! கெஞ்சு கின்றேன்;
நேரில்லா இவ்வரசும், ஆரி யத்தால்
நிலைகெட்ட தமிழ்நாடும் இருந்திங் கென்ன?
நீர் பெருக்கி அழித்தொழிப்பாய்; மீண்டும் நல்ல
நெறிசெல்லும் தமிழ்நாடு முளைக்க வேண்டும்!

'அரசனுக்கும் ஆண்டிக்கும் வேறு வேறு
சட்டதிட்டம் அற்றுலகம் வாழ வேண்டும்;
அரசன்தன் இச்சையைப்போல் எதையும் செய்யும்
அடுக்காத செயல்மண்ணில் ஒழிய,வேண்டும்;
கரையில்லாப் பெருங்கடலே! தனித்திங்கின்று
கலங்குகின்றேன்; மாமல்லன் எனது வாழ்வைத்
தரைமட்டம் செய்துவிட்டான்; சீறிப் பொங்கிப்
பழிவாங்கு தப்பாதே!' என்றான்; வீழ்ந்தான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/54&oldid=1253270" இலிருந்து மீள்விக்கப்பட்டது