பக்கம்:கொடி முல்லை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிதாசன்

47


கற்சிலைகாள்! மலைக்குகைகாள்! நீங்கள் இந்தக்
கருத்திழந்த பல்லவனுக் கறிவிப் பீரோ?
பொற்புடைய கலையூற்றை இழந்தேன்; வாழேன்;
புளிக்குதெனக் கிவ்வுலகம்! இங்கென் வேலை?

நாணற்றால் வில்வெற்றி உண்டோ? யாழின்
நரம்பற்றால் நல்லிசையைக் கேட்கப் போமோ?
பூணற்றால் மதயானை அரசர் கோட்டைப்
புறமதிலைப் பெயர்த்திடுமோ? இயற்கைக் காட்சி
காணுகின்ற விழியற்றால் கலைதான் உண்டோ?
கற்பனையின் பெருக்குண்டோ? என்றன் வாழ்வின்
மாணிக்கச் சுடரொளியாள் செத்தாள்; இந்த
மண்ணுலகம் புளிக்குதெனக் (கு)! இங்கென் வேலை?

"காதலுக்கு மதிப்பில்லா இந்த நாட்டைக்
கருக்கிடுவாய் தூயதமிழ் அன்னாய்; மக்கள்
சாதலுக்குப் பயந்ததனால் கொடுமை யெல்லாம்
தாங்கிஇங்கு வாழ்கின்றார்; ஆரி யத்தை
ஆதரித்த தாலன்றோ தமிழர் வாழ்வு,
கலையெல்லாம் அழிந்தொழிந்த திந்த நாட்டில்?
தீதெல்லாம் நன்மையென அரசன் எண்ணச்
செய்தெது? புறப்பட்டேன்; இங்கென் வேலை?

"கலைஞனுக்கு மதிப்புண்டு பழங்கா லத்தே:
காசில்லாப் புலவனுக்கும் அவ்வா றாகும்;
அலைந்துவந்த களை நீங்க முரசு கட்டில்
அயர்ந்தானுக் கோரரசன் கவரி வீசும்!
கலைக்கோயில் சமைக்கவந்தேன்; சோலை யுள்ளே
காதல்வந்து குதித்ததடி இயற்கை அன்னாய்!
விலைகொடுத்து வாங்குவதோ உலகில் காதல்?
வேலைஇல்லை இவ்வுலகில்; புறப்பட் டேன்நான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/53&oldid=1253269" இலிருந்து மீள்விக்கப்பட்டது