பக்கம்:கொடி முல்லை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கொடிமுல்லை


'கல்லொன்றால் மதயானை ஒன்றுண் டாக்கிக்
காண்பவரின் கருத்தீர்க்க நிறுத்தி யுள்ளேன்;
சொல்லுவரோ கல்லென்று? நீண்டு தொங்கும்
தும்பிக்கை எவர் தொடுவார்? அஞ்சி நிற்பார்!
மல்லாரும் தமிழ்நாட்டுக் கலையின் மேன்மை
வாய்விட்டுக் கூறுதற்கே யாரா லாகும்?
மெல்லடியாள் கொடிமுல்லை என்றன் வாழ்வு!
வேரறுத்தான் மாமல்லன்; இங்கென் வேலை?

'மலைகுடைந்து குகைக்கோயில் நுழையும் வாயில்
வரிசையாய் நிற்கின்ற சிங்கத் தூண்கள்,
சிலைஇரண்டு முன்வாயிற் படிக்கும் காவல்,
வருவோரைச் சிரித்துவர வேற்கத் தூணில்
நிலைபெற்ற நூலிடையாள் சிலைகள்; என்றன்
நெஞ்சறிவின் படைப் பலவோ? மறுக்கப் போமோ?
தொலைத்துவிட்டான் என் வாழ்வைக் கலையை மல்லன்:
தோகைமயில் உயிர் நீத்தாள்; இங்கென் வேலை?

'காட்டானைக் கூட்டத்தை, மானை, நீலக்
கருங்கடலின் வண்ணத்தான் படுக்கைப் பாம்பைக்
காட்டுதற்கும் மலைகுடைந்து செதுக்கி யுள்ளேன்;
கைத்திறத்தை என்னுளியைப் புகழார் உண்டோ?
நாட்டிற்கும், நரசிங்கப் பல்ல வற்கும்
நற்புகழை நான் சேர்த்தேன்; கைம்மா றென்ன?
தீட்டாத ஓவியமாம் என்றன் வாழ்வுக்
கொடிமுல்லை செத்தொழிந்தாள்; இங்கென் வேலை?

'கற்பனையைக் கலைவளத்தை ஏற ஒண்ணாக்
காடார்ந்த மலையெல்லாம் கொட்டி வைத்தேன்;
விற்போரில் நரசிங்கன் அடைந்த வெற்றி
விலையில்லா இக்கலைகட் கீடா கும்மா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/52&oldid=1253268" இலிருந்து மீள்விக்கப்பட்டது