பக்கம்:கொடி முல்லை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிதாசன்

45


'தீட்டாத ஓவியத்தை உளியால், என்றன்
திறமையினால் பாறையெலாம் செதுக்கி வைத்தேன்;
காட்டுதற்கு முடியாத கங்கை யாற்றுக்
கரைக்காட்சி என்னுளிகள் என்றும் காட்டும்!
காட்டகத்துக் குன்றிலெலாம் சிம்ம வர்மன்
கலைப்பற்றை நிலைநாட்டி விட்டேன்; முல்லைக்
கூட்டுறவால் துளிர்த்தோங்கும் என்றன் வாழ்வுக்
கலைமறந்தான் மாமல்லன்: இங்கென் வேலை?

'முல்லைநில இடையன்பால் கறக்கும் காட்சி
மூட்டாதோ பேரின்பம்? கன்றை நக்கும்
நல்லாவின் தாயன்பும் இல்லம் பேணும்
நற்பண்பைக் காட்டாதோ?* பூனையொன்றும்
சொல்லாதோ பகல்வேடத் துறவி செய்கை?
தூயதமிழ் நாட்டிற்கும் மல்ல னுக்கும்
கல் லுளியால் பெருஞ்சிறப்பைத் தேடித் தந்தேன்;
கருவழித்தான் என் வாழ்வை; இங்கென வேலை?

'மரத்தேரைப் போன்றிங்குத் தனித்த கல்லில்
வார்த்தெடுத்து வைத்துள்ளேன் தேர்கள் ஐந்து!
பொருத்தமில்லை என்றெதரால் கூறக் கூடும்?
புதுக்கலைகள் இவையெல்லாம்; இவைபோல் உண்டோ?
அருங்கலையின் பெருஞ்சிறப்பைப் பல்ல வர்கள்
நற்பெயரை அழியாது நிலைக்க வைத்தேன்!
கருத்திழந்தான் மாமல்லன்; என்றன் வாழ்வுக்
கலைமுல்லை உயிர்பிரித்தான்; இங்கென் வேலை?


  • கங்கைக்கரைக் காட்சி' பாறையில் செதுக்கப் பட்ட உருவங்களில் தவம் செய்யும் முனிவர்கள் முன் எலிகள் அச்சமின்றி உலவ, பூனையொன்று பின்கால்களில் நின்று முன் காலை உயர்த்திக் கண்மூடி யோகம் செய்யும் நிலையில் உள்ளது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/51&oldid=1253106" இலிருந்து மீள்விக்கப்பட்டது