பக்கம்:கொடி முல்லை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

கொடிமுல்லை


உனைக்காணப் பெறுவேனோ? நண்பா! நண்பா !
உன்கொடைக்குப் பலனில்லை; பனையின் கீழே
எனக்காகக் கொடிமுல்லை உயிரை விட்டாள்!
இதோநொடியில் புறப்பட்டேள்; இங்கென் வேலை?

“பாழாக்கி விட்டதடா தமிழர் பண்பைப்
பலசரக்குக் குடிபுகுந்து! மானம், வீரம்
தாழ்ந்ததடா! நம்நாட்டில் நரிக்குட் டிக்குத்
தலைதாழ்த்தும் அரிக்கூட்டம் தமிழ ரென்றால்
வாழ்வெதற்கு? நீள்புகழ்தான் நமக்கிங் கேனோ?
மண்ணாகிப் போகட்டும் அடிமை நாடு;
பாழ்செய்தீர் என்வாழ்வை அவளும் நீயும்;
பற்றில்லை; புறப்பட்டேன்; இங்கென் வேலை;”

கடற்கரையின் ஓரத்தே இருக்குஞ் சிற்பக்
கலைக்கோயில் மின்னொளியில் கண்டான்; ஏரி
மடையுடைந்து பாய்ந்துவரும் புனலைப் போலக்
கற்கோயில் நோக்கியவன் பாய்ந்து வந்தான்;
கிடத்தினான் காதலியின் பிணத்தை அங்குக்
கிடக்கின்ற கற்றூண்மேல்; சுற்றிச் சுற்றி
நடக்கின்றான்; ஏங்குகின் றான்; செதுக்கி வைத்த
நற்சிலை யைப் பார்த்தழுது நின்கின்றானே!

'சிங்கத்தின் தலைசெதுக்கித் தலையின் நீண்ட
சீர்மிகுநற் றூண்செதுக்கித் தூணின் உச்சி
மங்காத தாமரைப்பூ செதுக்கிச் செப்பு
மலைகடைந்த கலைக்கோயில் கல்லில் செய்தேன்;
சிங்கனுக்கும் புகழ்சேர்த்தேன்; கலைக்கும், என்றன்
சிற்றுளிக்கும் புகழ்சேர்த்தேன்; மறந்தான் மல்லன்;
பொங்குதுள்ளம்; என் வாழ்வுக் கலையை, முல்லைப்
பூச்செடியை வேரறுத்தான்; இங்கென் வேலை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/50&oldid=1253105" இலிருந்து மீள்விக்கப்பட்டது