பக்கம்:கொடி முல்லை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் 1

அவை கூடிற்று
புலவன் பாட்டொன்றை நீட்டினான்.



திருவாழும் மண்டபத்தில் புலவர் நின்றார்;
'செந்தமிழ்போல் வாழ்க’ என்றார். அரசன் வந்தான்!
கருவிழிக்கு மையெழுதி அங்குள் ளோரைக்
கடைக்கண்ணால் விழுங்கிற்றுப் பணிப்பெண் கூட்டம்!
'வருகஎங்கள் தமிழ்மறவன்' என்றார் கூத்தர்;
'வானோங்கக் கொற்ற'மென்றார் மறவர் கூட்டம்
இருகையும் இளநகையும் காட்டி வேந்தன்,
'இருந்திடுக அவரவர்கள் இருக்கை' என்றான்.

திருவிருந்த வீடுகடை திறந்தான்; அங்குச்
சேர்ந்திருந்த தமிழ்ப்புலவர், கலைஞர், ஆற்றில்
பெருகிவரும் வெள்ளத்தை மடைகள் போலப்
பெற்றிருந்தார்; உளங்களித்தார்; 'வாழ்க' என்றார்.
அருகிருந்த நுழைபுலத்தான், அமைச்சன், 'இங்கோர்
அழகாட உமதருளுக் கேங்கு' தென்றான். .
'சரி'யென்று தலை அசைத்தான் வேந்தன் கூடச்
சுவரெல்லாம் எதிரொலிக்கும் சதங்கைக் கேற்ப!

உள்ளத்தில் எழுகின்ற எண்ணம் தன்னை
உருவாக்கிச் சுழல்விழியால் பாம்புக் கையால்
வள்ளலென வழங்குகின்றாள்; மெய்சி விர்க்க
வாயசைத்துக் கொஞ்சுகின்றாள்: ஆங்கி ருந்தோர்
அள்ளுகின்றார் விழிஇரண்டால், கொள்ளை இன்பம்!
அரசன்மெய் மறந்திருந்தான்; மூரல் பூத்தான்;
'தெள்ளியசெந் தேன்கலைகள் வாழ்க்கைக்' கென்றான்.
நூலிடையாள் தீங்குயிலாள் நாணி நின்றாள்.

கொ-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/7&oldid=1244402" இலிருந்து மீள்விக்கப்பட்டது