பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


6

ங்கமணி எண்ணியபடியே பேராசிரியர் வடிவேலைக் கொல்லிமலைக் குள்ளன் சும்மா விட்டுவைக்கவில்லை. தங்கமணி முதலியவர்களைப் பரிசலில் ஏற்றி அக்கரைக் காட்டிற்கு அனுப்பிவிட்டதும் அவன் நேராகச் சத்திரத்திற்குச் சென்றான். அங்கு ஏதோ ஒரு துப்பறியும் நாவலைப் படித்துக் கொண்டிருந்த வடிவேலைச் சந்தித்தான்.

"உங்களிடம் ஒரு சிறு விபத்தைப்பற்றித் தெரிவிக்க வத்தேன். அது ஒன்றும் பெரிதில்லை. சின்னக் காயந்தான். ஆற்றிலே சிறுவர்கள் இரண்டு பேரும் ஒரு பாறையின்மீது ஏறி ஏறித் தண்ணீரில் குதித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு தடவை அப்படிப் பாறையில் ஏறும் போது சுந்தரம் கால் வழுக்கி விழுந்துவிட்டான். நெற்றியிலே கொஞ்சம் காயம் ஏற்பட்டுவிட்டது" என்று ஆங்கிலத்திலே சொன்னான்.

சுந்தரத்திற்குக் காயமா? ஏதாவது பலமாக அடிபட்டு விட்டதா?" என்று வடிவேலு கொஞ்சம் பரபரப்புடன் கேட்டார்.

"அப்படியொன்றும் பெரிதாக இல்லை. அதைப்பற்றிக் கவலை வேண்டாம். நான் என்னுடைய ஜாகைக்குக் குழந்தைகளை உடனே அழைத்துக்கொண்டு போனேன். அங்கே என்னுடன் வந்திருக்கும் மருத்துவரைக் கொண்டு தகுந்த சிகிச்சை செய்திருக்கிறேன். எல்லோருக்கும் அங்கேயே உணவும் ஏற்பாடு செய்துவிட்டேன். நீங்கள் பார்க்க வருவதானால் என் காரிலேயே என்னுடன் வரலாம்" என்று விரைவாக மறுமொழி சொன்னான்.

இந்தப் பேச்சையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வள்ளிநாயகி சமையல் அறையிலிருந்து வேகமாக வந்து, "போய்ப் பார்த்துவிட்டு அப்படியே எல்லாரையும் அழைத்து வாருங்கள். காயம் பலமோ என்னவோ !" என்று கூறினாள்.

"அப்படியொன்றுமில்லை. உங்களுக்குக் கவலை வேண்டாம். எல்லாரும் இப்பொழுது உணவருந்திக்கொண்டிருக்கிறார்கள்" என்று குள்ளன் மீண்டும் ஆங்கிலத்தில் தெரிவித்தான்.