53
புல்வெளி இருந்தது. சுற்றிலும் மரங்கள் ஓங்கி நின்றன. அவற்றின் மத்தியில் இருந்த அந்தப் பசும்புல் தரையிலே நின்று, காலை நேரத்தில் ஒரு மயில் அழகாக ஆடிக் கொண்டிருந்தது. பக்கத்தில் மூன்று பெண்மயில்கள் இரை தேடி உலாவிக் கொண்டிருந்தன. மூன்று பேரும் அந்த ஆண்மயிலின் ஆட்டத்தைக் கண்டு, அதில் மனத்தைச் செலுத்தி, அப்படியே நின்றுவிட்டார்கள். ஜின்காவும் அசையாமல் தோளின்மேல் அமர்ந்திருந்தது.
“அண்ணா, எத்தனை அழகாக அந்த மயில் ஆடுகிறது. இந்தக் காடு எனக்குப் பிடித்திருக்கிறது” என்று கண்ணகி மெதுவாகத் தங்கமணியிடம் கூறினாள்.
“பேசாதே, மயில் ஓடிப்போய்விடும்” என்று தங்கமணி மெதுவாக எச்சரிக்கை செய்தான். இந்தச் சமயத்தில் சுந்தரம் இரண்டு மரக்கிளைகளுக்கு இடையே வளைந்து தொங்கிக்கொண்டிருந்த ஏதோ ஒன்றைப் பார்க்கும்படி சுட்டிக் காட்டினான்.
அது ஒரு பெரிய மலைப்பாம்பு. ஒரு மரத்தின் கிளையிலே அதன் தலைப்பக்கம் சுற்றிக்கொண்டிருந்தது. மற்றொரு மரத்தின் கிளையிலே அதன் வால் பகுதி சுற்றிக் கொண்டிருந்தது. அதன் நடுப்பாகம் மெதுவாக வளைந்து கீழ்நோக்கித் தொங்கிக்கொண்டிருந்தது. பார்த்தவுடன் அதை மலைப்பாம்பென்று சொல்லவே முடியாது. ஏதோ ஒரு பெரிய கொடி ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவிச் சென்று படர்ந்திருப்பது போலத்தான் தோன்றிற்று. அதன் அடியிலே தரையின் மீது ஒரு முயல் புல்லை மேய்ந்துகொண்டு மெதுவாக வந்துகொண்டிருந்தது. அது மலைப்பாம்பு தொங்குமிடத்திற்கு வந்ததுதான் தாமதம், அந்தப் பாம்பு மின்னல் வேகத்திலே முயலின்மீது விழுந்து, அதைத் தன் நீண்ட உடம்பால் சுற்றிக்கொண்டது. அடுத்த கணத்திலே அந்தப் பாம்பின் தசைநார்களால் இறுக்கப்பட்டு, முயலின் எலும்புகள் ‘படபட’ என்று ஒடிந்தன. முயல் வீறிட்டுக் கத்தி மாண்டு போயிற்று. பிறகு, மலைப்பாம்பு தனது பெரிய வாயைத் திறந்து, அந்த முயலை விழுங்கத் தொடங்கிற்று. இந்தக் கொடிய காட்சியைக் கண்டு கண்ணகி பயத்தால்