உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

சொல்லக் கூடாதா? ஆபாச ரசமான, ஒரு கதை சொல்லித்தானா இதை விளக்க வேண்டும்? இதைத்தான் அவர்கள் ஆபாச நடை என்கிறார்கள்!' என்று சொல்லுகிறாய்; தம்பி புரிகிறது! பொறுத்துக்கொள், இந்தக் கதை, நான் சொன்னது அல்ல! எழுத்தோவியமே, ஆபாச நடை, கூடாது, பால் உணர்ச்சி ஆகாது என்று கண்டனக் குரல் எழுப்பியுள்ள தோழர் சம்பத் அவர்களுடையது.

அவர் பேசியதா? ஆபாசம் கூடாது என்பவர் பேச்சா?—என்று கேட்டு ஆச்சரியத்தால் மூர்ச்சையாகி விடாதே! அவரேதான்! அவருக்கு விருப்பம் இருந்த போது, இப்படிக் கதை கூறினார்—இப்போது கண்டிக்கிறார்!

இதிலென்ன ஆச்சரியம், திராவிட நாடு கூடாது என்று பேசுவோர் துரோகிகள், கங்காணிகள், இளிச்சவாயர், அகப்பட்டதை சுருட்டுபவர் என்று பேசினவரேதான் இன்று, திராவிட நாடு கனவு என்கிறார்!

அவருக்கு அவரே பதில் சொல்ல, ஏற்பாடு செய், தம்பி! அவரையும் மக்கள் புரிந்து கொள்ள முடியும். இப்படிப் பட்டவர்களால் தி. மு. கழகத்தை ஏதும் செய்திட முடியாது என்பது விளங்கும்.

தப்பி! இவ்வளவும் நான் எடுத்து எழுதுவது, விலகியவரின் போக்கில் ஏற்பட்டு விட்ட விசித்திரமான மாறுதலைச் சுட்டிக் காட்டி ஏளனம் செய்ய அல்ல. உள்ளபடி எனக்கு அதை நினைவிற்குக் கொண்டு வரும் போது, வேதனை பீறிட்டு எழுகிறதே தவிர, பரிகாசம் செய்திடத்தோன்ற வில்லை. நான் அவைகளை எடுத்து எழுதுவதன் நோக்கம், நமக்கு அவர் அளித்திருக்கும் அருஞ் செல்வம், இவ்வளவு கருத்துகளைத் தந்தவர், காலக் கோளாறினால், இன்று சாய்ந்து கொள்கிறார் என்றால், நாம் கோபிக்கத் கூடாது என்பதற்காகவுந்தான்.