உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

வாழாது! இங்கு வயலாகும், வாழ்வளிக்கும் வகை பெறுவோம், என்று கதைக்கின்றார், கருத்தறியாச் சிறார்போலே!! வெட்டிவரும் வேளையிலே பாறை இருந்திடுமே—பெயர்த்தெடுக்கும் கருவி எங்கே? பெரும் பள்ளந்தனைத் தூர்க்க எளிதாகுமோ இவரால்! உவர் மண்ணால் சுவர் எழுப்பி, உயரம் கண்டதுமே, ஒரு நொடியில் சாய்ந்திடாதோ, கூரை மேல் ஏறியதும்! கதவெங்கே, தாள் எங்கே? கனமான பூட்டுமுண்டோ? ஓடுண்டோ, ஓய்யாரம் தரவல்ல பலகணியும் தானுண்டோ! கள்ளிக்கும் சுள்ளிக்கும், கடும் விஷப்பாம்பினுக்கும் அல்லாமல் கனி குலுங்கும் தருக்கள் வளருதற்கோ, தக்க இடம் இஃது! ஈதெல்லாம் அறியாமல், ஏதேதோ எண்ணமிட்டு ஓயாது உழைக்கின்றார், ஒரு பலனும் காணார் காண்!!—என்று, 'உடையவர்கள்' இகழ்ச்சியுடன் பேசி நின்றார்; இவர்களோ அவர் வார்த்தை எமக்கல்ல என்று எண்ணி, இதயம்தனில் பதிந்த 'எழிலிடம்' அமைத்திடும் ஓர் ஏற்றமிகு செயலதனில், ஆற்றலெலாம் செலவிட்டார்.

பாறை கண்டபோது பதறினார் இல்லை, அவர்; பிளந்து பெயர்த்தெடுத்து, பொடியாக்கி, கீழ்பரப்பி, வலிவூட்டும் வகைபெற்றோம், இல்லத்தின் அடித்தளம் தனக்கென்று மகிழ்வுற்றார். கல் உடைக்கக் கரம் உண்டு; கருத்திலே உறுதி உண்டு; என்ன இனி நமக்குக் குறை; எழுப்பிடுவோம் நம் இல்லம்; எத்தனைதான் அழகியதாய் இருந்திடினும் மற்றதெல்லாம் இன்னொருவர் இடமன்றோ; இருந்திடலாம் என்கின்றார், தயவன்றோ காட்டுகின்றார்; கொத்தடிமை ஆக்குதற்கே கூவி அழைக்கின்றார்; இத்தரையில் நமது இல்லம் இனிதாய் அமைத்திட்டால், என் இல்லம்! எழில் இல்லம்! என்றெண்ணி மகிழ்ச்சியுடன் இருந்திடலாம் காலமெல்லாம், இன்று பாழ்வெளியாய் இருந்திடும் இவ்விடத்தில், முன்னம் ஓர் நாளில், உலவினராம் முடியுடையோர்;