உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

பம்—நமது இல்லம் இக்கூடம்—இங்கு, நான் மேல் நீ அல்ல, என்ற பேச்சுக்கே இடமில்லை, என்றெல்லாம் எண்ணி அவர் இதயம் களித்திருந்தார்.

ஏதேதோ திட்டமிட்டோம், எப்பலனும் கிட்டவில்லை. சிண்டு முடிந்துவிட்டோம், சிக்கறுத்துக் கொள்கின்றார். கலகம் மூட்டுகிறோம், கைகொட்டிச் சிரிக்கின்றார். கண்காட்டி அழைக்கின்றோம், கைவீசிப் போகின்றார். ஏதேது இந்த இல்லத்தார், ஏற்றம் மேல் ஏற்றம் பெற்று, எடுத்த காரியம் முடித்து, இன்பத் திராவிடம் அமைத்து எளியோர் எனினும் வலியோர் பெற்றிடா வெற்றிதனையும், கூடிப்பணியாற்றி, கொள்கை காத்து நின்றால், பெற்றிடுவார் என்ற பேருண்மைதனை நிலைநாட்டிவிடுவார் போலும். எங்ஙனம் கண்டிடுவோம். இவர் வெற்றி பெறுமதனை! என்னாகும் நமது முன்னைய பேச்செல்லாம்! மண்ணாகிப் போச்சுது பார், மற்றவர் பேச்செல்லாம், கண்ணீர்த் துளிகளன்றோ, காரியத்தை முடித்துவிட்டார், என்றெல்லாமன்றோ ஏசுவர், மற்றவர்கள். நாம் இதற்கு என் செய்வோம், அணிவகுப்புதனைப் பிளக்க ஆயிரத்தெட்டும் செய்தோம்; அத்தனையும் ஆடிக் காற்றிடைப்பட்ட பஞ்சாகிப் பறந்தனவே! பேதம் வருமென்று, பேராவல் கொண்டிருந்தோம்—அண்ணன் தம்பி என்று அவர்கள் குலவுகின்றார்! ஐயயோ! ஆபத்து! நாம் அழிந்திடுவோம், இது வளர்ந்தால், என்ன விலை கொடுத்தேனும், எப்பாடு பட்டேனும், சின்னத்தனமான செயலெல்லாம் செய்தேனும், பொன்னைத்தான் இழந்தேனும், கண்ணே! மணியே! என்று கனிவு பேசிப் பார்த்தேனும், உடைத்தாகவேண்டும் இந்த உள்ள உறவுதனை; பிளந்தாக வேண்டும் இந்தப் பெரும் படையை, அணிவகுப்பை; என்று எழுந்தனர், மனம் பொறாத மாற்றார்கள்—கன்னிப் பெண் கண்ணுக்கு மையிட்டு, கார் கூந்தல் தன்னிலே மணமல்லிதனைச் சூடி, சின்ன இடை துவள,