உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

அரண்மனையில் இருந்த கட்சியை அண்ணா அவர்கள் அந்தத் தீர்மானங்கள் மூலம் மைதானத்திற்குக் கொண்டுவந்து மக்கள் கட்சியாக மாற்றினார். அதன் பிறகு சமுதாயத்தில் மறுமலர்ச்சியையும், பொருளாதாரப் பொது உடைமையையும், அரசியலில் திராவிட விடுதலையையும், இலட்சியங்களாகக்கொண்டு திராவிடர் கழகம் நாட்டு மக்களை ஒன்று திரட்டியது. பின்னர், நல்ல சனநாயகப் பண்பு வளரத் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு முறையை வகுத்தோம். உழைத்தோம், இவ்வளவு குறுகிய காலத்தில் மகத்தான மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறோம், என்றுமில்லாத அளவிற்கு நாட்டு விடுதலைத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவும் பெருகி நிற்கிறது.

"அதுவும் 1947 ஆகஸ்டு 15-ல் இந்திய உபகண்டத்தின் ஆட்சி முறை வடநாட்டுக்காரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு கடந்த ஆறு ஆண்டுகளில் நமது நாடு அடைந்திருக்கும் அவலநிலை, ஆரம்பத்தில் நமது திட்டம் தேவையற்றது, ஆபத்தானது என்று எண்ணியிருந்தவர்களின் ஆதரவை எல்லாம்கூடப் பெற்றிருக்கிறது. வடவர் கையில் ஆட்சி சிக்கிய நாள் முதலாய் நமது நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி ஆகிய இந்த நிலைமைகளும், பட்டினிச்சாவு—பசியால், வேலையில்லாத் திண்டாட்டத்தால் குடும்பத்தோடு தற்கொலை, குற்றங்கள் மலிவு ஆகியவையும் சர்வசாதாரணமாகிவிட்டன. பருவ மழைகளும் தவறிவிட்டதால் வடவர் சுரண்டல் திரை மறைவில் நடைபெற முடியாமல் பட்டவர்த்தனமாக எல்லோர் கண்ணுக்கும் தெரியத்தக்க அளவில் நடைபெற்றது. இங்கு பசி, பட்டினி, வேலையில்லாத் திண்டாட்டம் என்னும் துன்பச் சூறாவளி கடந்த ஆறு ஆண்டுகளாக வீசிவரும் இதே காலத்தில், வடவர், வாழ்விலே வளம், ஏற்றம் ஆகியவைகளைக் கண்டு இன்புற்று வாழ்கின்றனர்.