44
"கழகக் கலைஞர்கள் எல்லாம் ஏதோ திடீரெனக் கழகத்திற்கு வந்தவர்கள் அல்லர். இராசேந்திரனை எடுத்துக் கொண்டால் அவர் என் எதிரில் வரப் பயப்பட்டுக்கொண்டிருந்த பருவத்திலிருந்து இன்று வரை கழகத்தில் இருப்பவர்.
"அப்படியேதான் பிறரும்—பல காலமாகக் கழகத்தில் இருப்பவர்கள்.
"அவர்கள் கழகத்தில் இருப்பதற்குக் கழகத்தால் கலையே வளருகிறது என்பதும் ஒரு முக்கியமான காரணம்.
"கழகத்தில் உள்ள கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பேசுவதையேகூட நான் விரும்புவதில்லை.
"கழகத்தில் சில டாக்டர்கள் இருக்கிறார்கள், சில என்சினியர்கள் இருக்கிறார்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் இருக்கிறார்கள், எழுத்தாளர்கள் இருக்கிறார்கள், உழவர்கள் இருக்கிறார்கள், தொழிலாளர்கள் இருக்கிறார்கள், அவர்களைப்போலவே சில கலைஞர்களும் இருக்கிறார்கள்' அவ்வளவுதான்."
தெளிவான விளக்கம் அல்லவா ?
தம்பி ! கலைஞர்களுக்கு மட்டும், குடி அரசுத் தலைவருக்குக் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில், விலக்கு அளித்துவிட்ட 'மாபாவி' என்றல்லவா என்னைச் சித்திரிக்கிறார்கள். தோழர் சம்பத், 'கலைஞர்களைத் தனியாகப் பிரித்துப் பார்க்காதீர்கள்—டாக்டர்கள்—என்சினியர்கள் போல அவர்களும் ஒரு தொழிலினர்' என்கிறார் ; அது போன்றே, விலக்கு அளிக்கப்பட்டது கலைஞர்களுக்கு மட்டுமல்ல ; டாக்டர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் கூடத்தான் ! இது ஏன் மறைக்கப்படவேண்டும் ?