உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

கொள்கிறார்; ஒரு கை பார்த்தே விடுவோம் என்று வீரமாக முழக்கமிட வேண்டாமோ! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு! ஆமாம், கவிதைகூட நமது தோழர் தீட்டியிருக்கிறாரே, 'அஞ்சாமை திராவிடர் உடைமையடா !' என்று, பலமுறை என் போன்றார் சலித்துக்கொண்ட துண்டு, இது மிதவாதப் போக்காயிற்றே; நமது அண்ணன் ஏன் இப்போக்குக் கொள்ளவேண்டும் என்று, சில வேளைகளில் கோபித்துச் கொண்டதுகூட உண்டு. ஆனால், அறைகூவலை ஏற்றுக்கொள்கிறேன்—திராவிட நாடு பிரச்சினையை முன்னால் வைத்துத் தேர்தலுக்கு நிற்க தி. மு. க. தயார் ! கேளும் நிபந்தனையை என்று அமைச்சருக்குச் சுடச் சுடப் பதில் அறைந்திருக்கிறீங்க ! இஃதன்றே எமக்குக் களிப்பூட்டும் பேச்சு ! இப்படிப்பட்ட முழக்கமல்லவா, எமது இரத்தத்தில் சூடேற்றவல்லது—நரம்புகளைப் புடைத்திடச் செய்வது—என்றெல்லாம்தானே தம்பி ! எழுச்சி பொங்கக் கூறுகிறாய். ஆமாம் ! விடுதலைப் பேரார்வம் கொந்தளிக்கும் உள்ளம் உனக்கு ! திராவிடம் என் பிறப்புரிமை என்று முழக்கமிடுகிறாய் ! அந்த முழக்கத்தை எவரேனும் கேலி செய்தால் கொதிப்படைகிறாய்; களம் காணத் துடிக்கிறாய்? எனவேதான், அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக் கொள்கிறேன் ! என்ற பேச்சுக் கேட்டதும், ஆர்வத்தால் துள்ளி எழுகிறாய்; அண்ணனைப் பாராட்டுகிறார் ! புரிகிறது—ஆனால், கவலைதான் குடைகிறது! ஏன் என்கிறாயா ?

வீரச் சுவை செறிந்திட, அஞ்சா நெஞ்சுடன், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன், திராவிடம் மீட்கப்பட வேண்டும் என்ற கடமை உணர்ச்சியுடன், அமைச்சரின் அறைகூவலை ஏற்றுக்கொண்டு, தேர்தல் களம் வாரீர் ! இரண்டிலொன்று பார்த்து விடுவோம் ! என்று தீப்பொறிபறக்கப் பேசியது, தம்பி ! நான் அல்ல ! திராவிட நாடு பகற்கனவு என்று இன்று பேசும் சம்பத்து ! ஆமாம், தம்பி !