86
இதயம்—நல்லவன் வாழ்வான் எனும் இரண்டோடு என் கலை உலகத் தொடர்பை நிறுத்திக்கொள்கிறேன்; யோசனை கூறி என்னை நல்வழிப்படுத்திக் கழகத்தைச் செம்மைப்படுத்தும் அவரைக் கொள்கையை விட்டுவிடாமல், சமதர்மத்தை இழந்துவிடாமல் பணியாற்றச் சொல்லேன்—பார்ப்போம்.
இந்த அளவு கலைத் தொடர்புகூட ஏன் எனக்கு ? அதன் மூலமாக ஏதேனும் நல்லறிவுப் பிரசாரம் செய்ய வழிகிடைக்குமா என்ற ஆவல் தான்! கலை உலகத் தொடர்பு கூடாது என்பதுதான் என் மனக்குமுறல் என்று இன்று பேசுபவரே, கலை உலகில் நான் தொடர்பு கொண்டதாலே பகுத்தறிவுத் துறைக்குக் கலை திரும்பிற்று என்று பேசிக் கேட்டு மகிழ்ந்து, நம்பிச் செய்யத் தொடங்கியது தான்.
போலிவாதம் பேசும் அரசியல் மேதைகளுக்கு ஈ. வி. கே. சம்பத் எச்சரிக்கை என்ற தலைப்பில், அவருடைய சென்னைப் பேச்சு, ஒன்று இருக்கிறது. அதில் இது இடம் பெற்றிருக்கிறது;
"திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சி அல்ல; அது டிராமா, சினிமா, கட்சி என்று அந்த 'அரசியல் மேதை'கள் நம்மைப்பற்றிக் கூறியிருக்கிறார்கள். உலகில் எந்தக் கட்சியில்தான் கலைஞர்கள் இல்லை ? எல்லாக் கட்சியிலும் கலைஞர்கள் இருக்கிறார்கள். நம்மிடம் மக்களின் உள்ளத்தைக் கவர்ந்த கலைஞர்கள் இருக்கிறார்கள்.
"இந்த நாட்டில் காங்கிரஸ் உலவுவதற்குக் காரணமாக இருந்தவர்கள் யார்? காந்தியாருக்கு அடுத்தபடியாகச் சத்திய மூர்த்தியும், கே. பி. சுந்தரம்பாள் என்ற அம்மையாரும் தான்! நன்றி கெட்ட காங்கிரசார் வேண்டுமானால் இதை மறந்திருக்கலாம்.