பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

கோடுகளும் கோலங்களும்

“கிடைக்கும். நீ பரீட்சை எழுதிட்டு மதுரைக்கு வா. விமன்ஸ் பாலிடெக்னிக் இருக்கு. சேரலாம்.”

அவள் முகம் ஒளிருகிறது. மத்தாப்பூக்கட்டினாற் போல். “நிச்சயமாவா மாமா?”

“நிச்சயமா, உன்னோடு நான் ஏன் விளையாடணும்? நல்ல ஸ்கோப். சொந்தத் தொழில் செய்யலாம், வேலையும் கிடைக்கும்..”

“ப்ளஸ் டு படிக்கணும்ன்னாலும் உங்க ஸ்கூலில் இடம் கிடைக்குமா?”

“அதுவும் பார்க்கலாம்.”

“அம்மா என்ன எப்பப் பார்த்தாலும், பொம்புளப்புள்ள படிச்சிட்டு என்ன கிழிக்கப் போறேன்னு இன்ஸ்ல்ட் பண்ணுது. அதக்காகவேணும், நான் படிப்பேன்.”

“படி... உங்கம்மாவுக்கு ஒரு பாடம். . நீ வா, சரோ... பரீட்சைஎழுதிவிட்டு வா.”

இந்தப் பொண்ணைவேறு எதற்குத் தூண்டிவிட வேணும்?

அவளுக்குக் கோபம் கொள்ளாமல் வருகிறது. அவங்கவுங்க அவங்கவுங்க வேலையப் பார்த்திட்டுப் போனா நல்லாயிருக்கும். சமுசாரிக் குடும்பத்துலதா கட்டணும். அதுக்கு மேல எடுப்பு எடுக்க உங்களுக்குச்சத்து இல்ல. என்று முகத்தைக் காட்டி விட்டுப் போகிறாள்.

அவர்கள் கிளம்பிச்செல்வதில் வருத்தமில்லை. அவர்கள் சந்தோஷமாக உறவு கொண்டாடாததோ, எதோ ஒப்புக்கு வந்து போவதோ எதிர்பாராததில்லை. அவள் வருத்தம், கன்னியப்பன் இரண்டு நாட்களிலும் வந்து தலை கூடக் காட்டியிராததுதான். அவனுக்கென்று அவள் வாங்கிக் கொடுத்த கோடி வேட்டியும், சட்டையும் அணிந்து அவன் வரவில்லை. மறுநாள் மாட்டுப் பொங்கல், மாடுகளைக் குளிப்பாட்டி, கொம்புக்கு வர்ணம் அடித்து, அவன்தானே எல்லாம் செய்வான்.