பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

155

“இதப் பாரு, அத்தப் பத்தி எதும் பேசாத சரோ டென்த் பரிட்சை எழுதியிருக்கு. இவ, ஆறாவது கூடப் படிக்கல! கேவுறில நெய்யொழுகுதுன்னா கேப்பாருக்குமதி வாணாம்! இதுபோல யாரிட்டயும் சொல்லிட்டுத் திரியாத அவங்கப்பா காதுல வுழுந்தா, உன்னியே உண்டில்லன்னு பண்ணிடுவாங்க.”

இப்படி ஓர் ஆத்திமாக அவளையும் அறியாமல் சொற்கள் வருமென்று அவளே நினைத்ததில்லை.

ஏதோ ஓர் ஆசை மெல்லிழையாக இருந்தது உண்மைதான். ஆனால், அது நடப்பின் உண்மைகளில் ஊட்டம் பெறும் வாய்ப்புக்களே இல்லை. ஒரே மகளின் கல்யாணம். அந்த மகள் சந்தோசப்பட வேண்டாமா? புருசன், அம்மா, அப்பா...ஏன், அந்த ஒரு மாமன் பந்தலில் நின்று வரிசை வைத்துப் பெருமைப்பட வேண்டாமா? இந்தக் கன்னியப்பனுக்கு என்ன இருக்கிறது? பெற்ற தாய், தந்தை கூடத் தெரியாது. அந்தக் கிழவி மகா சூசனைக்காரி. இவள் பொங்கலன்று அவனைத் தேடிச் சென்று துணி வாங்கிக் கொடுத்ததைக் கிழவியிடம் சொல்லி இருப்பான். அவர்கள் சரிகைக் கனவுகள் காணும்படி இடம் கொடுத்தவள் அவள்தான்...

மனம் எப்படியெல்லாமோ கணக்குப் போடுகிறது.

பட்டாளக்காரர் கெட்டிக்காரர். இந்த மாதிரி ஒரு பிடிப்பை அவனுக்கு அவரே ஏற்படுத்தி இருக்கலாம். இப்போது என்ன குடி முழுகிப் போயிற்று? நல்ல சாய்கால். ஒரே பெண். பூமி சொந்தமாகலாம். இவனும் மக்கள் மனிதர் இல்லாதவன். பெண் அடக்கம். புறாப் போல் சாது. நல்ல ஜோடிதான்...

இப்படி ஒரு பக்கம் கணக்குப் போடுகிறது மனம்.

ஆனால் ஊடே கை நழுவிப் போனாற் போலும் ஆற்றாமை தவிர்க்க முடியவில்லை.

கொல்லை வழியாக அவள் வீட்டுக்கு வருகிறாள். பசு இவளை இனம் கண்டு கொள்கிறது.