பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கோடுகளும் கோலங்களும்

சோர்ந்து போன விவசாயக் குடும்பமாகியிருக்கிறது. இதை நிமிர்த்த வேண்டும்.

“அப்பா, நேத்து சாயங்காலம் சாராயம் குடிச்சிட்டு வந்திருக்கிறீங்க. அத்த நிறுத்துங்க. உங்களுக்கு அதுக்கு மட்டும் காசு எப்படிக் கிடைக்குதோ? எருவடிக்கப் போவ, அது இதுன்னு வண்டியோட்டிட்டுக் காசு தேடிக்கிறீங்க..”

“இல்...ல. இல்...ல செவுந்தி. கொஞ்சுண்டு சுடுதண்ணி வச்சிக் கொண்டா...” என்று இரைஞ்சுகிறார்.

செவந்தி உள்ளே சென்று அடுப்பை எரிய விடுகிறாள். அவருக்கு ஒரு வட்டையில் வெந்நீரை ஊற்றி ஆற்றிக் கொண்டு வருகிறாள்.

“அம்மா, நீ எந்திரிச்சிக் கொஞ்சம் வேலயப் பாரு. உக்காந்துட்டே இருக்காதே...” என்று எழுப்புகிறாள்.

வாசலில் கணவன் அதற்குள் எழுந்து போயிருக்கிறான்.

“த, சரவணா... எந்திரிச்சி முகம் கழுவிட்டுப் படி. எந்நேரமும் ஆட்டம் ஓட்டம். பத்தும் பத்தாம மார்க் வாங்கிப் பாஸ் பண்ணிருக்க. எந்திரு!’

நடவாளுகள் ஐந்தாறு பேர், கன்னியப்பன் எல்லோருக்கும் சோறு பொங்க வேண்டும்.

தவலையை அடுப்பில் வைத்து உலை போடுகிறாள். அரிசியை முறத்தில் எடுத்து வைக்கிறாள். இன்னோர் அடுப்பில், ஒரு சட்டியில் பருப்பை வேக வைக்கிறாள். வெங்காயம், கத்திரி, உருளை என்று காயை அரிந்து ஒரு புறம் நகர்த்துகிறாள். புளியைக் கரைத்துக் குழம்பையும் கூட்டி வைக்கிறாள்.

“சரோ? எந்திரி, எந்திரிம்மா? இன்னைக்கி நடவு. கிளாசெடுத்த மாதிரி பயிர் வைக்கிறோம். எல்லாம் ஒம்பது மணிக்கு வந்திருவாங்க. நீயும் செத்த வந்திட்டு, அப்படியே ஸ்கூலுக்குப் போகலாம்?” என்று எழுப்புதலுடன் தன் ஆசையையும் வெளியிடுகிறாள். இத்தனை நேரமும் பேசாமல் இருந்த அம்மா சட்டென்று சீறுகிறாள்.