பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராஜம் கிருஷ்ணன்

29

ராஜம் கிருஷ்ணன் 29

தான். கிணற்று நீர் கரும்பாக இனிக்கும். அவர் அங்கேயே பல நாட்கள் யோகத்தில் அமர்ந்திருப்பார். என்றேனும் ஊருக்குள் வந்து பிச்சை கேட்பார். உள்ளே அழைத்தால் பெரும்பாலும் வரமாட்டார். நோய் நொடிக்குப் பச்சிலை மருந்து தருவார். பச்சிலைகள் அவருக்குத் தெரியும். ஏதேதோ செடிகள் அந்த நந்தவனத்தில் வளர்ந்திருந்தன. மக்கள் குறை கேட்பார். ஆறுதல் சொல்வார்.

அவர் இருக்கிறார் என்றால் கோயில் வளைவில் மக்கள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருப்பார்கள். பாம்புக் கடி, தேள் கடி என்றால் வேறு ஊர்களில் இருந்தும் கூட இரவோ, பகலோ, சிகிச்சைக்கு ஆட்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். ஆனால், அவர் காசைக் கையால் தொட்டதில்லை. அதிகம் பேசவும் மாட்டார். அவர் ஊரில் இருக்கிறார் என்றால் ஊருக்கே பொலிவு இருப்பது போல் நம்பிக்கை இருந்தது. ரங்கனுக்கு இந்தக் கோயில் சாமியிடம் மிகுந்த ஈடுபாடு. அவர் அப்போது ஊரில் இருக்கக் கூடாதா என்று நினைப்பான். அந்த ஈடுபாட்டினால் அவன் கவிச்சி, இறைச்சி எதுவும் தொடமாட்டான். கள், சாராயம் எந்தப் பழக்கமும் கிடையாது. அவர் திடீரென்று ஊரை விட்டுப் போய்விடுவார். திடும்மென்று ஒரு நாள் வந்திருப்பார். அவர் யோகசாதனையினாலேயே அப்படி மறைந்து போகிறார். பிறகு வருகிறார் என்று ரங்கன் சொல்வான். அந்தச் சாமி, ஊரை விட்டுப் போய் வெகு நாட்களாகிவிட்டன. சரவணன் ஐந்து வயசாகவும், சரோ எட்டு வயசாகவும் இருந்த போது அவர் வந்திருந்தார். ஏறக்குறைய பத்து வருசம் இருக்கும். அவ்வளவு இடைவெளி இதற்கு முன் இருந்ததில்லை. அவர் இமயமலையில் சமாதி ஆகிவிட்டார் என்று பேசிக் கொண்டார்கள். அம்மா ஏதேனும் ஒன்றென்றால் அவரிடம் சென்று திருநீறு வாங்கிக் கொள்வாள்.

சின்னம்மாள் வீட்டை விட்டுச் சென்ற பின்னர், ஒரு நாள் அம்மாசாமியிடம் திருநீறு வாங்கச்சென்றாள். அவர் அவளை உறுத்துப் பார்த்தார். திருநீறு கொடுக்கவில்லை.

“இந்தச் சாமி பாக்கற பார்வை சரியில்லை. ஏன் திருநீறு குடுக்கல?” என்று வீட்டுக்கு வந்து பொருமினாள்.