ராஜம் கிருஷ்ணன்
35
“அதா. வூட்டுக்கு வந்து நம்ம உள்மாந்தரம் எல்லாம் தெரிஞ்சிக்கிடுவாங்க ரொம்ப சாக்கிரதையா இருக்கணும். .”
செவந்திக்கு அநியாயமாகப் புருசன் இன்று ஐநூறு ரூபாய் போல் பணம் செலவழித்திருப்பதை நினைத்து எரிச்சல் வருகிறது. அடக்கிக் கொள்கிறாள்.
“இப்ப எதுக்கு நா வந்தேன் சொல்லட்டுமாக்கா? எங்க நாத்தானா நிலம் இருக்குன்னு சொன்னேன்ல்ல? அதுல பயிர் வைக்கிறன். அரைகாணி முறையா நாத்தங்கால் வுட்டு, அதும் திரம் மருந்து போட்டு விதை செய் நேர்த்தி பண்ணி, எல்லாம் போட்டு பயிர் வைக்கலான்னிருக்கே. வர புதங்கிழமையன்னிக்கு காலம வந்தீங்கன்னா, வூட்ல வெத செய் நேர்த்தி பண்ணுறப்ப சேந்து செய்யலான்னு... அப்படியே இவங்களும் உங்கூட்டுக்காரரப் பாத்திட்டு போகாலான்னு வந்தாம்.”
“வாரேன். நமுக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் உதவிக்கணுந்தான? இருங்க முதமுதல்ல வந்திருக்கிறீங்க. உள்ள வாங்க. கொஞ்சம் பாயசம் சாப்பிடலாம்.”
உள்ளே வருகிறார்கள். பூசை இடத்தில் விளக்கு எரிகிறது. சாந்தி பார்க்க டீச்சர் போல் இருக்கிறாள். புருசன் சராய் சட்டை போட்டு கடிகாரம் கட்டிக் கொண்டிருக்கிறான்.
யாரோ ஆபிசர் என்றுதான் அம்மா நினைத்திருக்க வேண்டும்.
அந்தக் கயிற்றுக் கட்டிலைக் காட்டி “உக்காருங்க” என்று உபசரிக்கிறாள்.
சிறு தம்ளர்களில் அவள் கொடுத்த பாயாசத்தைச் சாப்பிட்டு விட்டு அவர்கள் விடை பெறுகிறார்கள்.
அவர்களை வாயில் வரை வழியனுப்பிவிட்டு, செவந்தி உள்ளே வருகிறாள். சுந்தரி சும்மாயிருக்கக் கூடாதா?