பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கோடுகளும் கோலங்களும்


ஒட்டலுக்குக் கூட்டிச் சென்று இட்டிலியும் காபியும் வாங்கிக் கொடுத்து அவர் வீட்டிலேயே வைத்துக் கொண்டதும் நினைவு இருக்கிறது.

பிறகு, சின்னம்மாவின் இந்த வடிவம்....

இளைத்துத்துரும்பாக... நெற்றிப் பொட்டும் மூக்குத்தித் திருகாணிகளும் இல்லாமல், கன்னம் ஒட்டி..... சாயம் மங்கிய ஒரு சேலையைப் பின் கொசுவம் வைத்துக் கட்டிக் கொண்டு, முந்தியை இடுப்பைச் சுற்றி வரிந்து செருகி இருப்பாள்.

காதில் முன்பிருந்த தோடுகள் இல்லை. தேய்ந்த சிவப்புக்கல் திருகு ஒன்று ஒட்டை தெரியாமல் மறைத்தது. வளையமோ மாலையோ எதுவும் கிடையாது. எப்போதுமே வேலை செய்தவள் அவள்தானே!

வீடு பெருக்கி, மாவாட்டி.... மாட்டுக் கொட்டில் சுத்தம் செய்து, தண்ணிர் இறைத்து, சாணி தட்டி, சோறாக்கி... ஓயாமல் வேலை. கழனிக்குப் போவாள்.

கல்யாணத்துக்கு முன் அவள் வளர்த்த ஆடுகளை விற்றுத் தான் பாட்டனார் அந்தக் கொல்லை மேட்டுப் பூமியை வாங்கினாராம். அதை ஓட்டிப் போக ஆள் வந்த போது, “அப்பா எனக்கும் அக்காவைப் போல் நாலு சவரனில் செயின் வாங்க வேணும்” என்றாளாம்.

ஆனால் செயின் வாங்காமல், பூமி வாங்கி, தன் மூத்த மருமகன் செவந்தியின் அப்பா பேரில் எழுதி வைத்தார். பிறகு தான் சின்னம்மாவுக்குக் கல்யாணம் ஆயிற்று; வாழ்வும் போயிற்று.

பாட்டன் இறந்த போது, வயிறும் பிள்ளையுமாக இருந்த சின்னம்மா இதெல்லாம் சொல்லி அழுதாள்.

அவர் போன பிறகு, சின்னம்மாவுக்கு நாதியே இல்லை என்றாயிற்று.