பக்கம்:கோடுகளும் கோலங்களும்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

கோடுகளும் கோலங்களும்

எங்கிட்டச் சொல்லிடு. பாவம், அதுக்கு ஒரு கெதி இல்லாம பாவி பண்ணிட்டன். அது உம் புள்ளன்னாலும் இருந்திட்டுப் போகட்டும்; உனுக்கே கட்டி வச்சிடறேன்னு சொன்னாரு...” “அப்டில்லாம் இல்ல... இது அவம் புள்ளதா. அபாண்டமா அதும் பேரில பழி சொல்லாதீங்க...”

“அரச பொரசலா ஊரெல்லாம் பேசுனா அசிங்கமாயிடுமேப்பா...”ன்னாரு.

“பேசுனவங்க நாக்கு அழுவிடும்னே. ஆனா, ஆரு நாக்கும் அழுவல. அவருதா அறுப்பறுத்திட்டிருந்தவரு, நெஞ்சு வலின்னாரு, போயிட்டாரு. உனுக்கு ஞாபகமிருக்குமே செவுந்தி?”

செவந்தி சிலையாக நிற்கிறாள்.

இப்படி ஒரு பொறி அவளுக்குள் தட்டியதில்லை. ஆனால், சின்னம்மாவுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று அப்பா அபிப்ராயப்பட்டதை அவரே சொல்லி இருக்கிறார்.

“இதொண்ணும், பழிபாவமில்ல. அந்தப் புள்ளையையும் பாத்துக்கிட்டு, கொல்ல மூட்டுல பயிர்பண்ணுறவ யாரேனும் வந்தா கட்டிட்டா என்ன? அதுக்கு ஒரு நாதி இருக்குமே?” என்று சண்டை போட்ட விசயம் இவள் வளர்ந்த பின் நினைவில் தெறித்திருக்கிறது.

ஆனால், நட்டுவாக்காலி வாயில் கவ்விக் கொண்டுதான் கொடுக்கால் கொட்டும். அம்மா அப்படித்தான் தங்கச்சியைப் பற்றி இருந்தாள் என்று தோன்றுகிறது.

“என்ன, இங்க அப்பனும், மகளும் பேசுறீங்க...? ஏ... என்ன ஒரு வீட்டில் அப்பனும் மகளும் கட்சி கட்டுறீங்க?”

அந்தக் குரல் அம்மாவுக்குரியதா?

இது எங்கிருந்து வருகிறது? பாம்பு செத்து, குப்பைக்குப் போனபின், அது மேடாகிப் புதைந்து பின், இன்னும் பலம் இருக்குமா? எதனால் இப்படிப் பயம்?

“இங்க யாரும் கட்சி கட்டல. இதுக்கு நேரமும் இல்ல” என்று சொல்லிவிட்டு அகலுகிறாள் செவந்தி.